துப்பாக்கியைக் காட்டி வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற 86 வயது மூதாட்டி! 400 டாலர் அபராதத்தால் வங்கியை பழிவாங்க திட்டம்!
பழைய திரைப்படம் ஒன்றில் நடிகர் நாகேஷ், மூதாட்டி வேடம் போட்டுக் கொண்டு, வங்கி மேனேஜரிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பணம் கொள்ளையடித்துச் செல்வார். வங்கி ஒன்றுக்கு செல்லும் அவர், மேனேஜரை துப்பாக்கியால் மிரட்டிவிட்டு, அவரிடம் இருந்து பணம் கொள்ளை அடிப்பார். தான் சென்ற சில நிமிடங்களுக்குப் பிறகே நீ (வங்கி மேனேஜர்) கூச்சலிட வேண்டும் என்றும் அப்படி இல்லை என்றால் மீண்டும் வந்து சுட்டுவிடுவேன் என்றும் கூறி மிரட்டி விட்டு செல்வார்.
இதன் பின் சில நிமிடங்களுக்குப் பிறகே மேனேஜர் கூச்சலிடுவார். பின்னர் அங்குவரும் போலீசார், மேனேஜர் சொல்லும் அங்க அடையாளங்களை வைத்து, ஒரு மூதாட்டியை அழைத்து வந்து, நீதான் கொள்ளையடித்தாயா என்று டார்ச்சர் செய்வார்கள்.
இந்த நிலையில், மூதாட்டி வேடம் பூண்ட நாகேஷ், அங்கு வந்து கொள்ளை அடித்தது, போலீசாரால் பிடித்து வரப்பட்ட மூதாட்டி அல்ல என்றும், தான் மூதாட்டி வேடம் போட்டு கொள்ளை அடித்ததாகவும் கூறி, பணத்தை திரும்பவும் வங்கி மேனேஜரிடம் கொடுத்துவிடுவார். அனைவரையும் சிரிக்க வைத்த இந்த காட்சி போன்று அமெரிக்காவில் உள்ள ஒரு வங்கி ஒன்றில் உண்மையாகி உள்ளது.
வாஷிங்டன்னில் 86 வயது மூதாட்டி ஒருவர் வங்கியை கொள்ளையடிக்க முயன்றுள்ளார். தற்போது இவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காலையில் வங்கியில் மக்கள் கூட்டம் இருக்கும் நேரம் பார்த்து உள்ளே நுழைந்த அந்த மூதாட்டி, தான் வைத்திருந்த துப்பாக்கியைக் காட்டி பணத்தை கேட்டுள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த போலீசார், மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்.
வங்கியில் கொள்ளையடிப்பதற்கு அந்த மூதாட்டி காரணம் ஒன்றையும் கூறியிருக்கிறார். அந்த மூதாட்டியின் கணக்கில் இருந்து 400 டாலர், வங்கியால் அபராதமாக வசூலிக்கப்பட்டிருக்கிறது. அந்த தொகையை மீண்டும் வசூலிக்கவே அவர் இப்படி கொள்ளையில் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது.
மேலும், மூதாட்டி கொண்டு வந்த துப்பாக்கியை சோதனை செய்ததில், துப்பாக்கியில் குண்டு இல்லாமல் இருந்ததாகவும், துப்பாக்கியின் ட்ரிக்கரில் தவறுதலாக கை பட்டு யாரும் மரணமடைந்து விடக் கூடாது என்பதற்காக மூதாட்டி குண்டுகள் இல்லாமல் கொண்டு வந்ததாகவும் போலீசார் கூறியுள்ளனர்.