தெற்காசிய பொருளாதார வளர்ச்சி விகிதாச்சாரத்தில் இந்தியாவைக் காட்டிலும் வங்காளதேசத்தின் வளர்ச்சி அதிகரித்துள்ளது.  எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக முன்னேறி வருகிறது வங்கதேசம் என வர்த்தக நாளேடுகள் புகழ்ந்து வருகின்றன.

எப்போதும் இல்லாத அளவிற்கு இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், அது தொழில், மற்றும் வேலை வாய்ப்புகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மேலும் தொடர்ந்து நாட்டை மோசமான பாதைக்கு இட்டுச் சென்று விடுமோ என்ற  அச்சத்தில் தொழில் நிறுவனங்கள் உறைந்துள்ளன. இந்நிலையில் தெற்காசிய பொருளாதார வளர்ச்சி குறித்து ஆசிய வளர்ச்சி 2019 என்ற தலைப்பில்,  அவுட்லுக் அமைப்பு ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.  அதில் தெற்காசிய நாடுகளில் முன்னோடியாக இந்தியா உள்ளது என்றும்,  அதே நேரத்தில் இந்தியாவைக் காட்டிலும் வங்கதேசம் பொருளாதாரத்தில் முன்னேறி வருகிறதென்றும், வங்கதேசத்தை கட்டிலும் இந்தியாவின் பொருளாதாரம்  பின்தங்கி உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது. 

கடந்த  2016ஆம் ஆண்டில் 8.2 சதவீதமாக இருந்த இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி,  2018 ஆம் ஆண்டு 7.0 ஆக இருந்தது என்றும்  அதே காலகட்டத்தில் 2016ஆம் ஆண்டு 7.1 சதவீதமாக இருந்த வங்கதேசத்தின் ஜிடிபி,  2018 ஆம் ஆண்டு  7.9 சதவீதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதே 2019 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி  7.2 சதவீதமாக  இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில்,  வங்கதேசத்தின் பொருளாதார வளர்ச்சி 8.1 சதவீதமாக உயர்ந்து காணப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 1990 களில் உலகில் அதிவேகமாக வளரும்  பொருளாதாரத்தை கொண்ட நாடாக இந்தியா இருந்தது.

இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு 60 சதவீகிதம் சேவை சார்ந்த துறைகளே பங்காற்றின, ஆனால் இதே காலத்தில் வங்கதேசத்தில் வளர்ச்சியில் தொழிற்சாலைகள் பங்காற்றின, குறிப்பாக ஜவுளி தொழில் வங்கதேசத்தின் வளர்ச்சியில் பெரும் அளவில் பங்காற்றியது அதன் காரணமாக ஏற்றுமதி அதிகரித்து பொருளாதாரத்தில் முன்னேறி வருகிறது வங்கதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.