இஸ்லாமியர்களுக்கு எதிராக டிரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு தடை….. அமெரிக்க நீதிமன்றம் அதிரடி….

அமெரிக்காவிற்குள் அகதிகள் நுழைய தடை விதித்த அதிபர் டிரம்பின் உத்தரவுக்கு தற்காலிக தடைவிதித்த நியூயார்க் நீதிமன்றம், விசாவுடன் அமெரிக்காவிற்கு வரும் அகதிகளை ஏற்றுக்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. 

அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

அதன்படி, அமெரிக்காவிற்குள் அகதிகள் குடியேறத் தடை மற்றும் ஈராக், சிரியா, ஈரான் உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதற்குத் 3 மாத கால தடை என பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில், டொனால்டு டிரம்ப் தடை விதித்த 7 நாடுகளிலிருந்து முறையாக விசா பெற்று அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க இருந்த பயணிகளை இந்த புதிய உத்தரவு பெரிதும் பாதித்துள்ளது.

இந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகள் அமெரிக்க விமான நிலையங்களில் தடுத்து நிறுத்தப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், டிரம்பின் அதிரடி உத்தரவு தொடர்பாக நியூயார்க் கிழக்கு மாகாண நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதுகுறித்து விசாரணை நடத்திய நீதிபதி, டொனால்ட் டிரம்பின் தடை உத்தரவை நிறுத்திவைத்து ஆணை பிறப்பித்தார்.

மேலும், அமெரிக்க விமான நிலையங்களில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள வெளிநாட்டவர்களை வெளியேற்றும் பணியை நிறுத்துமாறும் அமெரிக்க அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 இதனையடுத்து அமெரிக்காவில் பயணிகள் தரையிறங்க அனுமதி கிடைத்து உள்ளது.