கடந்த மாதம் 18ம் தேதி காஷ்மீர் மாநிலம் உரி ராணுவ முகாம் மீது, பாகிஸ்தான் ராணுவ உதவியுடன், பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், 19 இந்திய ராணுவ வீரர்கள் மரணமடைந்தனர். இதற்கு பதிலடியாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் கடந்த 28ம் தேதி இந்திய ராணுவம் நுழைந்து தீவிரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.

இதை தொடர்ந்து பாகிஸ்தானில் இந்திய டி.வி. சேனல்களை கேபிளில் ஒளிபரப்ப பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை கட்டுப்பாட்டு ஆணையம் சில நிபந்தனைகளை விதித்தது.

தற்போது இந்த கட்டுப்பாடுகளை ரத்து செய்துவிட்டு இந்திய டி.வி. சேனல்கள், ரேடியோ ஆகிய ஒளி– ஒலிபரப்பின் மீது முழுமையான தடையை விதிக்க இந்த ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்த தடை நாளை மதியம் 3 மணி முதல் அமலுக்கு வருகிறது. இதனால் இனி பாகிஸ்தானில் இந்திய டி.வி. சேனல் ஒளிபரப்பு மற்றும் ரேடியோ ஒலிபரப்பு எதுவும் இருக்காது.

இதையும் மீறி கேபிள் ஆபரேட்டர்கள் யாராவது செயல்பட்டால் அவர்களுடைய கேபிள் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.