ஐஎஸ் அழிந்தது…. பாக்தாதி மட்டுமல்ல, அடுத்த தலைவரையும் கொன்னுட்டோம்: பெருமையாக அறிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அல் பாக்தாதி மட்டுமல்ல அவருக்கு அடுத்த தலைவரையும் சேர்த்து அமெரிக்க ராணுவம் கொன்றுவிட்டது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் நிறுவனத் தலைவர், அபுபக்கர் அல்-பக்தாதி. சிரியாவில் இஸ்லாமிய அரசை உருவாக்க வேண்டும், புனிதப் போர் தொடுக்க வேண்டும் என்று மூளைச்சலவை செய்து பிரச்சாரம் செய்ததால், பல்வேறு நாடுகளிலிருந்து ஏராளமான இளைஞர்கள், பெண்கள் ஐ.எஸ். அமைப்பால் ஈர்க்கப்பட்டனர்.
ஈராக் மற்றும் சிரியாவில் சில பகுதிகளை 2014 ஆம் ஆண்டு இந்த அமைப்பு, கைப்பற்றியது. இதையடுத்து, அந்த அமைப்பின் தலைவர் அல் பாக்தாதி இஸ்லாமியக் குடியரசை உருவாக்கி விட்டதாகப் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதன்பின் அமெரிக்கா மற்றும் கூட்டுப்படைகள் நடத்திய தொடர் தாக்குதலில் ஐஎஸ்ஐ ஸ் அமைப்பின் வசம் இருந்த பல பகுதிகள் மீட்கப்பட்டன. இருப்பினும், ஐ.எஸ்.தீவிரவாதிகள் தொடர்ந்து அமெரிக்கா வீரர்கள், கூட்டுப்படையினர் மற்றும் பல்வேறு நாடுகளில் தாக்குதல் நடத்தி வந்தனர். ஐஎஸ். தீவிரவாதிகள் தாக்குதலில் மட்டுமே உலக அளவில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.
இலங்கையில் நடந்த தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், நீண்ட இடைவெளிக்குப்பின் விடியோவில் தோன்றிய அல்-பக்தாதி சுமார் 18 நிமிடங்கள் பேசினார்.
ஐ.எஸ்.தலைவர் பாக்தாதி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 25 மில்லியன் டாலர் பரிசும் அமெரிக்க அறிவித்து இருந்தது.
இந்நிலையில், சிரியாவில் வடமேற்கு பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் சிறப்புப்பிரிவு நடத்திய தேடுதல் வேட்டையில் சனிக்கிழமை இரவு அல் பாக்தாதி அவரின் 3 மகன்கள், கூட்டாளிகள் பலர் உயிரிழந்ததாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குறிப்பிடுகையில் “ மாற்றுப்பாதை இல்லாத குகைக்குள் அமெரிக்க ராணுவத்தின் நாய்கள் அல்பாக்தாதியையும், அவரின் மகன்களையும் துரத்திச் சென்றன. அமெரிக்க படைகள் சுற்றி வளைத்தபோது, கண்ணீர் விட்டு அழுது நாயைக் போல், கோழையைப் போல் தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்து உயிரிழந்தாார்
அவரின் உடலின் டிஎன்ஏ வைஆய்வு செய்து அல்பாக்தாதி என்பதை உறுதி செய்துவிட்டோம். விரைவில் வீடியோ வெளியிடப்படும்.
அனைத்து சட்டப்பூர்வ நடைமுறைமுறைகளும் முடிந்தபின் அல்கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனை புதைத்தது போன்று கடலுக்கு அடியில் புதைத்துவிடுவோம்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன்று ட்விட்டரில் வெளியிட்ட அறிவிப்பில், “ ஐஎஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அல்-பாக்தாதி ஏற்கனவே உயிரிழந்துவிட்டார். அவருக்கு அடுத்தார்போல் தலைமைப் பதவிக்கு வருவதாக இருந்த தீவிரவாதியையும் அமெரிக்க படைகள் கொன்றுவிட்டது. இது உறுதியான தகவல். ஐஎஸ் தீவிரவாத அமைப்பு அழிந்தது” எனத்தெரிவித்துள்ளார்