உலகம் ஃபுல்லா சுத்துனீங்களே பிரதமர் மோடி அவர்களே..! இதுபோல என்றாவது செய்தீர்களா?
ஆஸ்திரேலிய பிரதமர் மால்கோம் டர்ன்புல், அரசுமுறைப் பயணமாக இஸ்ரேல் செல்ல இருக்கிறார்.
வரும் திங்கட்கிழமை இஸ்ரேல் செல்ல உள்ள அவர், செல்வதற்கு முன்பாகவே, தான் இல்லாத நேரத்தில் பணிகளை கவனித்துக் கொள்வதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் பிஷப்பை தற்காலிக பிரதமராக நியமித்துள்ளார். பிரதமர் பணிகளை அவரை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளார்.
தான் வெளிநாடு செல்வதால் தனது பணிகள் எதுவும் தடைபட்டுவிடக் கூடாது என்பதற்காக பிரதமரால் தற்காலிக பிரதமர் நியமிக்கப்படுகிறார்.
ஆனால், வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்வதையே பிரதான பணியாக வைத்துள்ள பிரதமர் மோடி அவர்கள் இதுவரை இப்படியொரு காரியத்தை செய்ததில்லையே என மக்கள் விமர்சனம் செய்கின்றனர்.
உலக நாடுகளுடன் நல்லுறவு, அந்நிய முதலீட்டை ஈர்ப்பது, தீவிரவாதத்திற்கு எதிராக உலகநாடுகளை ஒன்றிணைப்பது ஆகியவை பிரதமர் மோடியின் தொடர் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு கூறப்படும் காரணங்கள்.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகளான இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், ஆப்பிரிக்க நாடுகள், ஆசியாவில் சீனா, ஜப்பான், ரஷ்யா, கிழக்காசிய நாடுகள், மத்திய கிழக்காசிய நாடுகள் என கிட்டத்தட்ட உலகநாடுகளையே சுற்றிவந்துவிட்டார் பிரதமர் மோடி. ஆசியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா என அனைத்து கண்டங்களிலும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு சென்றுவிட்டார் மோடி.
ஆனால் இதுவரை அவர் மேற்கொண்ட எந்த சுற்றுப்பயணத்தின்போதும் அவரது பணிகளை மேற்கொள்வதற்கு தற்காலிக பிரதமராக யாரும் நியமிக்கப்பட்டதில்லை. அதே நேரத்தில் அவரது பணிகளை யார் மேற்கொள்வது என்ற அறிவிப்பை கூட வெளியிட்டதில்லை.
அத்தனை வெளிநாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இதுபோன்ற நடவடிக்கைகளை அந்நாடுகளிடமிருந்து கற்றுக்கொள்ளவில்லையா என்ற கேள்வியையும் பலர் முன்வைக்கின்றனர்.