ஆஸ்திரேலியா- சீனா இடையே பனிப்போர்...!! யார் மிரட்டலுக்கும் அஞ்சமாட்டோம், ஸ்காட் மோரிசன் திட்டவட்டம்..!!
"நாங்கள் ஒரு திறந்த வர்த்தக தேசம், வர்த்தகத்திற்கு துணையாக இருக்கிறோம், அதேநேரத்தில் நாங்கள் ஒருபோதும் எங்கள் மதிப்புகளை வர்த்தகம் செய்வதில்லை என்றும், எந்த வற்புறுத்தலையும், மிரட்டலையும் நாங்கள் பொருட்படுத்த மாட்டோம்" எனவும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா-ஆஸ்திரேலியா இடையே மறைமுக மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், நாங்கள் எந்த மிரட்டலையும் பொருட்படுத்த மாட்டோம் என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் விவகாரத்தில் ஆஸ்திரேலியாக்கும், சீனாவுக்கும் இடையிலான உறவு மோசமடைந்துள்ளது. சமீபத்தில் கொரோனா வைரஸ் பரவல் குறித்து சீனா மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஆஸ்திரேலியா வலியுறுத்தியதுடன், கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற உலக சுகாதார சபைக் கூட்டத்தில் சீனாவுக்கு எதிராக சர்வதேச விசாரணை வலியுறுத்தும் தீர்மானத்தையும் கொண்டு வந்து நிறைவேற்றியது. இதனால் சீனாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான உறவு முற்றிலும் கேள்விக்குறியாகியுள்ளது. அதாவது சீனாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே நீண்ட கால வர்த்தக உறவு நீடித்து வந்த நிலையில், அதில் முறிவு ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா தன்னுடைய வர்த்தகத்திற்கு 50 சதவீதம் அளவுக்கு சீனாவை நம்பியுள்ளது.
ஆண்டுக்கு சுமார் 235 பில்லியன் டாலர்கள் சீனா மூலமாகவே ஆஸ்திரேலியாவுக்கு கிடைக்கிறது, குறிப்பாக மாட்டிறைச்சி ஏற்றுமதி, பீர், பார்லி ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு ஏற்றுமதிகளுக்கு சீனாவையே ஆஸ்திரேலியா சார்ந்துள்ளது. இந்நிலையில் தனது நட்பு நாடான அமெரிக்காவுடன் இணைந்து சீனாவுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவந்த நிலையில் சீனா, ஆஸ்திரேலியா மாட்டிறைச்சி இறக்குமதிக்கு தடைவிதித்து. ஆஸ்திரேலிய பார்லி மீது கட்டணங்களை விதித்துள்ளது. ஆஸ்திரேலியா தனது நாட்டின் மிகப்பெரிய வருமானமாக கருதும் கல்வித்துறையிலும் சீன மாணவர்களையே சார்ந்துள்ளது. குறிப்பாக ஆண்டுக்கு 38 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டப்படுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியா மீதுள்ள அதிருப்தியால் தனது நாட்டு மாணவர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சீன கல்வித்துறை, மாணவர்கள் ஆஸ்திரேலியா சென்று கல்வி பயில வேண்டியது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும், ஆஸ்திரேலியாவில் சீனா மற்றும் ஆசிய கண்டத்தினருக்கு எதிராக இனவெறி தாக்குதல் நடத்தப்படுகிறது, அதுமட்டுமின்றி கொரோனா முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வராத நிலையில் ஆஸ்திரேலிய பயணத்தில் சீன மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளது.
அதேபோல் தங்கள் நாட்டுக் குடிமக்கள் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தை தவிர்க்க வேண்டும் எனவும் சீனா வலியுறுத்தி உள்ளது. தங்கள் நாட்டுக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானது, என்றும் அபத்த குப்பை என்றும் ஆஸ்திரேலியா மறுத்துள்ளதுடன், ஒரு பிரபலமான கல்வி கேந்திரமாக ஆஸ்திரேலியா திகழ்கிறது, சர்வதேச நாடுகளில் இருந்து வரும் மாணவர்களுக்கு உயர்தர கல்வி ஆஸ்திரேலியாவில் வழங்கப்படுகிறது. சீன மாணவர்கள் சுயமாக முடிவெடுத்து உயர்கல்விக்காக ஆஸ்திரேலியா நோக்கி வருவார்கள் என நம்புவதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் இது குறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனிடம் ஆஸ்திரேலியா சீனா இடையேயான வர்த்தகம் தொடருமா என கேட்டதற்கு, "நாங்கள் ஒரு திறந்த வர்த்தக தேசம், வர்த்தகத்திற்கு துணையாக இருக்கிறோம், அதேநேரத்தில் நாங்கள் ஒருபோதும் எங்கள் மதிப்புகளை வர்த்தகம் செய்வதில்லை என்றும், எந்த வற்புறுத்தலையும், மிரட்டலையும் நாங்கள் பொருட்படுத்த மாட்டோம்" எனவும் அவர் உறுதிபட தெரிவித்துள்ளார். இதன் மூலம் சீனா-ஆஸ்திரேலியா இடையே மறைமுக பனிப்போர் உருவாகியிருப்பது தெளிவாக தெரிகிறது.