இந்தியாவுக்கு துணையாக களமிறங்கிய ஆஸ்திரேலியா..!! இனி அதிரடி சரவெடி..!!
இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையே வலுவான உறவு உள்ளது. ஒருமித்த மனப்பான்மை கொண்ட இரு ஜனநாயக நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படுவது மிகவும் அவசியம் என்றார்.
கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா மீது சர்வதேச விசாரணை வேண்டுமென தீவிரமாக முழங்கி வரும் ஆஸ்திரேலியா, இந்திய எல்லையில் சீனாவின் அத்துமீறலை கடுமையாக விமர்சித்துள்ளது. இதுகுறித்து சீனாவை மறைமுகமாக விமர்சித்துள்ள ஆஸ்திரேலிய தூதர் பாரி ஓ பிரெயில், " சில நாடுகள் தங்கள் எல்லைக்கு வெளியே உள்ள பகுதிகளில் பலவந்தமாக தலையிடுவதன் மூலம், தேவையற்ற பதற்றத்தை உருவாக்கி வருகிறது. இது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள தக்கது அல்ல என அவர் விமர்சித்துள்ளார். கடந்த மே 5ஆம் தேதி இந்திய- சீன எல்லையான பாங்கொங் த்சோ பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட சீன பாதுகாப்பு படையினருக்கும், பாதுகாப்பு பணியில் நின்றிருந்த இந்திய வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் இரண்டு தரப்பிலும் 10க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். அதைத்தொடர்ந்து சிக்கிமை ஒட்டியுள்ளனர் நகுலா பாஸ் பகுதியில் இதே போன்ற ஒரு பிரச்சனையில் 250க்கும் மேற்பட்ட இந்திய-சீன ராணுவ வீரர்கள் மோதிக்கொண்டனர். இரும்பு கம்பி, தடி போன்ற ஆயுதங்களுடன் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் இருதரப்பிலும் வீரர்கள் காயமடைந்தனர்.
இச்சம்பவத்தையடுத்து இருதரப்பிலும் லெப்டினன்ட் ஜெனரல் அந்தஸ்திலான அதிகாரிகள் மட்டத்தில் நடத்திய பேச்சுவார்த்தையில், பிரச்சனை தணிந்தது. அதைத் தொடர்ந்து மே- 22ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய ராணுவம், சீனாவுக்கு சொந்தமான பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து குடில்களை அமைத்ததாக குற்றம்சாட்டிய சீனா, அப்பகுதியில் ஏராளமான ராணுவ வீரர்களை குவிக்கத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து இந்தியாவும் தனது படைகளை குவித்து வருகிறது. இதில் இரு தரப்பிலும் படைகள் குவிக்கப்பட்டு 20 நாட்கள் ஆகியும் இன்னும் அங்கு பதற்றம் தணியவில்லை, இருதரப்பிலும் ராணுவ ரீதியாகவும் ராஜதந்திர ரீதியாகவும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஆசியாவின் அதி வல்லமை படைத்த இரண்டு நாடுகளிடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்திய-சீன எல்லை விவகாரத்தில் பல்வேறு நாடுகள் கருத்து கூறி வரும் நிலையில், ஆஸ்திரேலிய நாட்டு தூதர் பாரி ஓ பிரெயில் சீனாவுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, தைவான் தொடங்கி லடாக் வரை சீனா பதற்றங்களை உருவாக்கி வருகிறது.
இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் ஜனநாயக நாடுகள். இரு நாடுகளிலும் கிரிக்கெட் மிகவும் பிரபலமானது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை சுதந்திரமானதாக வைத்திருக்க இருநாடுகளும் கடமைப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார். மேலும் சீனாவை மறைமுகமாக சாடியுள்ள அவர், சில நாடுகள் தங்கள் எல்லைக்கு வெளியே உள்ள பகுதிகளில் பலவந்தமாக தலையிடுவதன் மூலம் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன. இது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள தக்கது அல்ல. இந்தோ பசுபிக் பிராந்தியத்தை சுதந்திரமாகவும் , திறந்த மையமாகவும் வைத்திருப்பது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவின் பொறுப்பு என அவர் கூறியுள்ளார். இந்திய-சீன எல்லை விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, இந்தியாவும், சீனாவும் இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்க்க வேண்டும் இதில் ஆஸ்திரேலியா அல்லது வேறு எந்த நாடும் கருத்து கூறக் கூடாது என அவர் கூறினார். மேலும் இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையே வலுவான உறவு உள்ளது. ஒருமித்த மனப்பான்மை கொண்ட இரு ஜனநாயக நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படுவது மிகவும் அவசியம் என்றார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுக்கும் இடையிலான வீடியோ கான்பரன்சிங் உரையாடல் ஜூன் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தை எவ்வளவு நேரம் நீடிக்கும் என தகவல் இல்லை, ஆனாலும் இரு நாட்டுக்கும் இடையேயான பாதுகாப்பு, பரஸ்பர வர்த்தகம் மற்றும் கொரோனா தொற்றுநோயை கையாள்வது, உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்கபடலாம் என கூறப்படுகிறது. பிரதமர் ஸ்காட் மோரிசன் இந்த ஆண்டு ஜனவரியில் இந்தியாவுக்கு வர திட்டமிட்டிருந்தார் ஆனால் ஆஸ்திரேலியாவின் காடுகளில் ஏற்பட்ட தீ விபத்தால் அவரது பயணம் ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.