உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 50 லட்சத்தை கடந்துவிட்டது. 3 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் சுமார் 16 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதுடன், 93 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரிட்டன், ஸ்பெய்ன், இத்தாலி, ஜெர்மனி, ஃப்ரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகள் தான் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. தென் அமெரிக்கா நாடான பிரேசில், 2 லட்சத்து 71 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்புடன் நான்காமிடத்தில் உள்ளது. 

ஆசியாவை பொறுத்தமட்டில், கொரோனா உருவான சீனாவை விட இந்தியாவில் அதிகமான பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துவிட்டது. இவ்வாறாக அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா ஆகிய கண்டங்களில் பெரும்பாலான நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கண்டங்களுடன் ஒப்பிடுகையில் வளர்ச்சியில் மிக மிக பின் தங்கிய ஆப்பிரிக்காவில் கொரோனா பாதிப்பு மிக குறைவு.

ஆப்பிரிக்க நாடுகளில் பதிவாகியுள்ள மொத்த பாதிப்பே 88 ஆயிரம் தான். மேலும் ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனாவால் மொத்தமாகவே 3 ஆயிரத்துக்கும் குறைவானோர் தான் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகளின் பாதிப்புடன் ஒப்பிடுகையில் இது மிகக்குறைவு. 

இந்நிலையில், ஆப்பிரிக்க நாடுகளிடமிருந்து கொரோனா தடுப்பில் வளர்ந்த நாடுகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என ஐநா பொதுச்செயலாளர் ஆண்டோனியா குடரெஸ் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள குடரெஸ், ஆப்பிரிக்காவில் நாங்கள் கணித்ததை விட கொரோனா பரவல் மிகவும் குறைவாகவே உள்ளது. ஆப்பிரிக்க நாடுகளின் அரசாங்கங்களும் மற்ற அமைப்புகளும் சில துணிச்சலான முடிவுகளை எடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்தியுள்ளது. கொரோனா தடுப்பில் ஆப்பிரிக்க நாடுகளின் செயல்பாடுகள், சில வளர்ந்த நாடுகளுக்கே சிறந்த படிப்பினையாக அமைந்துள்ளன என்று ஆப்பிரிக்க நாடுகளை புகழ்ந்தார். 

கொரோனாவால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள வல்லரசு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளைத்தான் குடரெஸ், ஆப்பிரிக்க நாடுகளிடமிருந்து கற்க சொல்கிறார். ஆனால் அமெரிக்கா, பிரிட்டன் என்று பெயர் குறிப்பிட்டு சொல்லவில்லை.