கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் இன்று முதல் பொதுமக்களுக்கு கொரோனா  தடுப்பூசி பயன்பாட்டிற்கு வருவதாக அந்நாடு தகவல் தெரிவித்துள்ளது. ஃபிப்சர் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அவசரத் தேவைக்கு பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிகக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸிலிருந்து மக்களை பாதுகாக்க உலகின் முன்னணி நாடுகள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ஆக்ஸ்போர்டு உட்பட பல்வேறு தடுப்பூசிகள் இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளது.  இதற்கிடையில் அமெரிக்காவின் ஃபிப்சர் மருந்து நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் மருந்து நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியின் இறுதிக்கட்ட ஆய்வு முடிவு கடந்த நவம்பர் 9 ஆம் தேதி வெளியானது.  அதில் தடுப்பூசி 90% கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கிறது என ஃபிப்சர் மருந்து நிறுவனம் தெரிவித்திருந்தது.  இந்த தடுப்பூசியால் பெரிய அளவில் பக்க விளைவுகள் ஏதும் இல்லாததே இதன் சிறப்பு எனவும் அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. இதனால் கொரோனா வைரசை எளிதில் கட்டுப்படுத்த முடியும் எனவும், 

பல நாடுகளும் ஃபிப்சர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை வாங்க ஆர்வம் காட்டி வந்தன. இந்நிலையில் கடந்த 2 ஆம் தேதி இந்த தடுப்பூசியை தங்கள் நாட்டு மக்களுக்கு  பயன்படுத்த இங்கிலாந்து அவசர அனுமதி வழங்கியது, இந்த தடுப்பூசி அமெரிக்க நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டதாக இருந்தாலும் பாதுகாப்பு காரணங்களுக்காக அதை பயன்படுத்த அந்நாடு தயக்கம் காட்டி வந்தது. இந்நிலையில் அதன் பரிசோதனைகளில் திருப்திகரமான முடிவுகள் வந்துள்ளதையடுத்து அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் இந்த தடுப்பூசியை அமெரிக்க மக்களுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கி உள்ளது. 

எனவே இந்த வார இறுதிக்குள் 30 லட்சம் தடுப்பூசிகள் அனைத்து மாகாணங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் என கொரோனா தடுப்பூசி வினியோக திட்டங்களை கவனிக்கும் மூத்த ராணுவ அதிகாரி குஸ்டாவ் பெர்னா தெரிவித்துள்ளார். அதேபோல் பக்ரைன், சவுதிஅரேபியா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளும் இத் தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.