சீனாவை திகிலடைய வைக்கும் அமெரிக்க போர் விமானங்கள்..!! தைவான் வான்பரப்பில் பதற்றம்..!!
அமெரிக்கா தைவானுக்குமிடையேயான ஒத்துழைப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தைவானில் சீனாவின் ஆதிக்கத்தை மட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்கா பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
தைவான்-சீனா விவகாரத்தில் அமெரிக்கா தொடர்ந்து தலையிட்டு வரும் நிலையில் அமெரிக்க போர் விமானங்கள் ஜூன் 9-ஆம் தேதி தைவானின் வான்வெளியில் பறந்ததை அடுத்து, சீன போர் விமானங்கள் தைவானில் வட்டமடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் தைவான் வான்பரப்பில் பதற்றமான சூழல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. தைவான் சீனாவின் ஒரு பகுதி என சீனா உரிமை கொண்டாடி வரும் நிலையில், தைவான் தன்னை ஒரு சுதந்திர நாடாகப் பிரகடனப் படுத்தியுள்ளது. மேலும் தைவான் சுதந்திர பிரகடனத்தை பலநாடுகள் அங்கீகரிக்காத நிலையில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தைவானின் சுதந்திரத்தை அங்கிகரித்து வருகின்றன.
ஏற்கனவே தென் சீன கடல் பகுதியில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் இருந்து வரும் நிலையில், தைவானில் அமெரிக்காவின் தலையீடு சீனாவுக்கு மேலும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. தைவான் விவகாரத்தில் தலையிட வேண்டாம் என அமெரிக்காவை சீனா எச்சரித்துள்ளது. அதேபோல் தைவானில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த சீனா முயன்று வரும் நிலையில், அமெரிக்கா, பிரிட்டன் ஆஸ்திரேலியா, உள்ளிட்ட நாடுகள் சீனாவை எச்சரித்துவருகின்றன. தைவான் தீவு விவகாரத்தில் அமெரிக்கா சீனா இடையே மோதல் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்கா தைவானுக்குமிடையேயான ஒத்துழைப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தைவானில் சீனாவின் ஆதிக்கத்தை மட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்கா பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
தைவானின் மேற்கு கடற்கரையோரத்தில் அமெரிக்காவின் சி-40 விமானங்கள், தாழ பறந்ததாகவும் அந்த விமானங்கள் தைவான் வான்பரப்பில் பறக்க அனுமதிக்கப்பட்டதாகவும், ஆனால் அந்த விமானங்கள் தரையிறங்கவில்லை எனவும் தைவான் பாதுகாப்பு ஆணையம் கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அமெரிக்க ராணுவம் தைவானில் பறப்பதை அறிந்த சீன போர் விமானங்கள் தைவானுக்கு வேகமாக விரைந்து வந்ததுடன், தைவான் வான்பறப்பில் மையம் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சீன விமானங்கள் வருவதற்குள் அமெரிக்க போர் விமானங்கள் அங்கிருந்து வெளியேறியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. தைவானுக்கு ஒத்துழைப்பை காட்டும் வகையில் அமெரிக்க போர் விமானங்கள் வருவதும், சீன போர் விமானங்கள் அதை கண்காணிப்பதும் தொடர்கதையாகி வருவதாக கூறப்படுகிறது.