அக்டோபர் மாதத்திற்குள் தடுப்பூசி தயாராக இருக்கும்..!! மருந்து கண்டுபிடிப்பில் இந்தியா-அமெரிக்கா போட்டி
அதில் 2021 க்கு முன்னர் கொரோனாவை எதிர்க்கும் ஆற்றல் மிகு தடுப்பூசி ஒன்று தயாராக இருக்கும் எனக் கூறியுள்ளார்.
கொரோனா வைரசால் மக்கள் கொத்துக் கொத்தாக உயிரிழந்து வரும் நிலையில், அவ்வனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனம் ஒரு நல்ல செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உலகம் முழுவதும் தடுப்பூசி ஆராய்ச்சி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்க மருந்து நிறுவனமான ஃபைசர் வரும் அக்டோபர் மாத இறுதிக்குள் புதிய தடுப்பூசி மனித பயன்பாட்டிற்கு வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. மறுபுறம் இந்தியாவைச் சேர்ந்த மருந்து நிறுவனமான சன் பார்மாசூட்டிகல்ஸ், இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரலில் (டி.சி.ஜி.ஐ) கோவிட் -19 க்கு எதிரான நெஃபோமோஸ்டேட் மெசிலேட்டின் மருத்துவ சோதனைக்கு ஒப்புதல் பெற்றுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இது இந்தியர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுக்கும் கொரோனா வைரஸ் பேரழிவை ஏற்படுத்தி வரும் நிலையில், அமெரிக்க மருந்து நிறுவனமான ஃபைசரின் தலைமை நிர்வாக அதிகாரி ஆல்பர்ட் பர்லா, ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார், அதில் 2021 க்கு முன்னர் கொரோனாவை எதிர்க்கும் ஆற்றல் மிகு தடுப்பூசி ஒன்று தயாராக இருக்கும் எனக் கூறியுள்ளார்.
ஆனால் உலக அளவில் உள்ள தொற்று நோயை தடுக்க 15 பில்லியன் டோஸ் தேவைப்படுவதால் அதை உற்பத்தி செய்வது சவாலானதாக இருக்கும் என அவர் கூறியுள்ளார். உலகம் முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருகிறது. சுமார் 60 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 3 லட்சத்து 67ஆயிரம் பேர் வைரசுக்கு உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸை கட்டுப்படுத்த கடந்த சில மாதங்களாக பல்வேறு உலக நாடுகள் போராடி வரும் நிலையில் , அது கட்டுக்கடங்காமல் மக்களை தாக்கி வருகிறது. இந்நிலையில் ஒரு பிரத்தியேக தடுப்பூசி வந்தால் மட்டுமே அதைக் கட்டுப்படுத்த முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் தடுப்பூசி ஆராய்ச்சியில் உலக அளவில் 30க்கும் அதிகமான நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. ஆயிரக்கணக்கான ஆராய்ச்சியாளர்கள் இரவு பகல் பாராமல் மருந்து ஆராய்ச்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். பல்வேறு உலக நாடுகள் போட்டி போட்டு மருந்து கண்டுபிடிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், அமெரிக்காவை சேர்ந்த ஃபைசர் மருந்து ஆராய்ச்சி நிறுவனம் வரும் அக்டோபர் மாதத்திற்குள் சிறந்த தடுப்பூசி தயாரித்து முடிக்கப்படும் என தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள அந்நிறுவனத்தின் தலைவர் பர்லா, தங்களது நிறுவனமான ஃபைசர் தற்போது ஐரோப்பா , அமெரிக்கா, ஜெர்மன் நிறுவனமான பயோடெக்குடனும் இணைந்து மருத்துவ பரிசோதனைகளை நடத்தி வருகிறது. மருந்து ஆராய்ச்சி சரியான பாதையில் சென்று கொண்டுள்ள நிலையில், அதிர்ஷ்டம் இருந்தால் வரும் அக்டோபர் இறுதிக்குள் ஒரு பாதுகாப்பான தடுப்பூசி தயாராக இருக்கும் என கூறியுள்ளார். ஆனால் தற்போது தயாரித்து வரும் தடுப்பூசி பாதுகாப்பானதா இல்லையா என்பது ஜூன் அல்லது ஜூலை மாதத்திற்குள் தெளிவாக தெரிந்துவிடும் எனவும் அவர் கூறியுள்ளார். எனவே இதற்காக ஃபைசர் தரவுகளை சேகரித்து ஆய்வு செய்து வருகிறது. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அஸ்ட்ரா ஜானெக்காவின் தலைவரான பாஸ்கல் சொரியட் இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி தயாரிப்போம் என்று நம்புவதாக கூறியுள்ளார். இதற்கிடையில், இந்தியாவிலும், கோவிட் -19 க்கு எதிரான மருந்தான நாஃபெமோஸ்டாட் மெசைலேட்டின் மருத்துவ பரிசோதனைக்காக மருந்து நிறுவனமான சன் பார்மாசூட்டிகல்ஸ் டி.சி.ஜி.ஐ.யின் ஒப்புதலைப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதன் மூலம் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு அதன் பரிசோதனையைத் தொடங்க முடியும் என்றும் , நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திலீப் ஷாங்க்வி கூறியுள்ளார். கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட வேண்டிய ஒரு மருந்தை, சன் பார்மா தொடர்ந்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளார். நரம்பு இரத்தக் கட்டிகள் (டி.ஐ.சி) மற்றும் கணைய அழற்சி அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க ஜப்பானில் நெஃபோமோஸ்டாட்டை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.