சீனாவுடனான உறவை முற்றிலுமாக துண்டிக்க வேண்டிய தருணம் வந்து விட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார் , இது இரு நாட்டுக்கும் இடையே மீண்டும் பழையபடி மோதல் போக்கை ஏற்படுத்தும்  சூழல் என சர்வதேச அரசியல் நோக்ககர்கள் கணித்துள்ளனர் .   இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் செய்திளார்களை சந்தித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ,  சீனாவுடனான  உறவை துண்டிப்பதில் அடுத்தடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து  குடியரசு கட்சியின் உறுப்பினர்களுடன் அவர் ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளார்.   கடந்த ஜனவரி மாதம் அமெரிக்கா சீனா இடையே வர்த்தக ஒப்பந்தம் நடைபெற்றது  அனைவருக்கும் தெரிந்த ஒன்றே ,   ஆனால் கொரோனா  வைரஸ் பரவலை  எச்சரிக்க தவறியதன் மூலம்  அமெரிக்கா சீனா இடையே ஏற்பட்ட அந்த ஒப்பந்தத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங் மண்ணள்ளிப் போட்டுவிட்டார். என ட்ரம்ப் காட்டமாக தெரிவித்துள்ளார்.

 

அந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டபோதே  இனியும் சீனாவுக்கு சலுகைகளை தங்களால் வழங்க முடியாது என கண்டிப்புடன் தான் தெரிவித்ததாகவும் தற்போது சீனாவுடன் வர்த்தக உறவை முற்றிலுமாக குறைத்துக் கொள்வதன் மூலம் அமெரிக்காவுக்கு  ஆண்டுக்கு 500 பில்லியன்   டாலர்கள் லாபம் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் .  இந்நிலையில் எவ்வாறான தடைகளை சீனா மீது கொண்டு வரப் போகிறீர்கள் என செய்தியாளர்கள் கேட்டதற்கு ,  இனிமேல் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் சீன மாணவர்கள் உயர் தொழில்நுட்ப கல்வி கற்க முடியாது ,  இங்கு  உயர் தொழில்நுட்பம் படித்துவிட்டு சீனா திரும்பும் அவர்கள் அமெரிக்காவுக்கு எதிராகவே செயல்படுகின்றனர். எனவே சீன மாணவர்கள் இனி அமெரிக்காவுக்கு கல்வி கற்க வருவதை நிறுத்தப் போகிறேன்.   இதுபோல இன்னும் பல தடைகளைக் கொண்டு வர இருப்பதாகவும்  அவர் தெரிவித்துள்ளார் . 

தற்போது சீனாவின் நடவடிக்கையின் மூலமாக அதிபர் ஜி ஜின்பிங்குடன்  பேச தனக்கு விருப்பமில்லை எனவும் அவர் கூறியுள்ளார் , கொரோனா தொற்றுக்குப்  பின்னர் அமெரிக்கா சீனா இடையே மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டிருக்கிறது ,  இது பழைய வர்த்தக போரை விட மிக மோசமாக  நிலையை அடைந்திருக்கிறது என குறிப்பிட்டுள்ள ட்ரம்ப் ,  இனி ஒரு வேளை நான் சீனாவுடன் பேச வேண்டி இருந்தால் இருநாடுகளும் உறவை முறித்துக் கொள்வது தொடர்பாகவே பேசுவேன் என ட்ரம்ப் ஆதங்கத்தை தெரிவித்துள்ளார் .  எதிர்வரும் தேர்தல் வெற்றிக்காகவே அமெரிக்க அதிபர் ட்ரம்ப்   சீனாவின் மீது பழிபோடும் ஒரு மோசமான நாடகத்தை அரங்கேற்றி வருகிறார், எனவும்  சீனாவுடனான வர்த்தகத்தை முறித்துக் கொள்வேன் என்று சொல்வதன் மூலம்  தனது கையில் இருக்கும் வைர மோதிரத்தை கழட்டி ஜன்னல் வழியாக அமெரிக்கா வீசுகிறது எனவும்  சீனா ஊடகங்கள் ட்ரம்பின் பேச்சை வர்ணிக்கின்றன.  ட்ரம்ப் தனது சுயநலத்திற்காக  சீனாவை மிரட்ட ஆரம்பித்திருக்கிறார் எனவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

 

இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் லீ லிஜியன் சீனாவுடனான வணிக உறவை மொத்தமாக முடித்துக் கொள்ளப் போகிறேன் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறுவது இரு நாட்டு வணிகத்தையும் பாழ்படுத்தும் முடிவு, அமெரிக்கா அவசரப்பட்டு இப்படி ஒரு முடிவை எடுக்கக் கூடாது இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் கொரோனாவை வீழ்த்துவதுடன்,  இரு நாடுகளும் கொரோனாவால் இழந்த வர்த்தகத்தை மீட்டுக் கொண்டுவர முடியும் என வலியுறுத்தியுள்ளார்.