கொரோனா விவகாரத்தில் சீனாவை அமெரிக்கா தோண்டி தூர்வாரி வரும் நிலையில் ,  திபெத்திலிருந்து கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட 14ஆவது பஞ்சன் லாமா இருக்கும்  இடத்தை சீனா உடனடியாக தெரிவிக்க வேண்டுமென அமெரிக்க  வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ எச்சரித்துள்ளார்.  இந்தியாவின் அண்டை நாடான சீனா திபெத் பகுதியை சொந்தம் கொண்டாடி வருகிறது ,  ஆனால் திபெத் மக்கள் சீனாவின் ஆதிக்கத்தை ஏற்க மறுத்து வருகின்றனர் .  அத்துடன் தாங்கள்  தனி தேசிய இன மக்கள்  எனவும் ,  திபெத் தனிநாடு எனவும் கூறிவருகின்றனர் . திபெத் மீது ஆதிக்கம் செலுத்திவரும்  சீனாவுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் அந்நாட்டின் மதத் தலைவர் தலாய் லாமா ,  சீனாவின் அச்சுறுத்தல் காரணமாக பல ஆண்டுகளாக  இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.  இங்கிருந்தபடியே திபெத்தை நிர்வகித்தும் வருகிறார் .  

இந்நிலையில் தலாய் லாமாவுக்கு பின்னர் திபெத்தின் அடுத்த தலைவராக அடையாளம் காணும் வகையில் கடந்த 1995 ஆம் ஆண்டு 
பதினோராவது பஞ்சன் லாமா பொறுப்புக்கு 6 வயது சிறுவனான கெதுன் சோக்கி நைமாவை தலாய்லாமாவின் இரண்டாம் பிறவி என்றும் அடுத்த தலாய்லாமா என்றும் திபெத்தியர்கள் தங்கள் மத வழக்குப் படி தேர்வு செய்தனர். ஆனால் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் விதமாக சிறுவன் தேர்வு செய்யப்பட்டு மூன்றாவது நாளே சீனா அச்சிறுவனை கடத்தியது . அதே நேரத்தில் வேறொரு சிறுவனை  பஞ்சன் லாமா என சீனா அறிவித்தது . ஆனால் மக்கள் அதை ஏற்கவில்லை,  இந்நிலையில்  பஞ்சன் லாமா கடத்தப்பட்டு  25 ஆண்டுகள் ஆகியும் அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை .  இது குறித்து சர்வதேச நாடுகளின் உதவியை திபெத் நாடிவந்த நிலையில்,  கொரோனா விவகாரத்தில் சீனாவை கடுமையாக விமர்சித்து வரும் அமெரிக்கா தற்போது  பஞ்சன் லாமா விவகாரம் குறித்தும் சீனாவிடம் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளது . இது குறித்து தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ ,  25 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட பஞ்சன் லாமா இருக்கும் இடத்தை சீனா பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும் . 

பஞ்சன் லாமா காணாமல் போனது ஒரு நபருக்கான அநீதி மட்டுமல்ல ஆறுகோடி திபெத்தியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி , அவர்களின்  மதச் சுதந்திரத்தில் தலையிடும் செயல் ,  எனவே பஞ்சன்லாமா இருக்கும் இடத்தை உடனடியாக சீனா பகிரங்கப்படுத்த வேண்டும் .  அனைத்து நபர்களுக்கும் மதச் சுதந்திரத்தை உறுதிப்படுத்தவும்  சர்வதேச கடமைகளை நிலைநிறுத்தவும் சீனா  அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கிறோம் .மற்ற சமூகங்களைப்போல திபெத் மக்களும் அவர்களின் மதத் தலைவர்களை அவர்களின் மரபுகள்படி பிற அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் தேர்ந்தெடுக்கவும் கல்வி கற்கவும், வணங்கவும் அவர்களுக்கு உரிமை உண்டு என சீனாவுக்கு  விடுத்துள்ள அறிக்கையில்  மைக் பாம்பியோதெரிவித்துள்ளார் .  மேலும் பதினோராவது பஞ்சன்லாமாவின் நலவாழ்வு மற்றும் இருப்பிடம் குறித்து சீனா சரியான தகவல்களை வழங்க வேண்டும் என்றும்  அவர் வலியுறுத்தியுள்ளார் . பஞ்சன் லாமா  விவகாரத்தில் தற்போது அமெரிக்கா தலையிட்டு இருப்பது சீனாவுக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது .