ஃப்ளோரிடா விமான நிலையத்தில் பயணிகள் மீது சரமாரி துப்பாக்‍கிச்சூடு … இளைஞரின் வெறிச் செயலால் 5 பேர் பலி!

அமெரிக்காவின் Florida நகரில் உள்ள விமான நிலையத்தில், இளைஞர் ஒருவர் சராமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்தனர். 

அமெரிக்‍காவில், அண்மைகாலமாக துப்பாக்‍கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. Florida மாகாணத்தின் Fort Lauderdale விமான நிலையத்திற்குள் துப்பாக்கியுடன் புகுந்த இளைஞர், திடீரென அங்கிருந்த பயணிகள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

இதனால் பதற்றமடைந்த பயணிகள், நாலாபுறமும் அலறியபடி ஓடத்தொடங்கினர். இந்த தாக்குதலில், 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

பின்னர், துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரது பெயர் Esteban Santiago என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டையடுத்து விமானச் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து, செல்லும் Fort Lauderdale விமான நிலையத்தில் நடைபெற்ற இச்சம்பவம், அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.