சீனாவின் வுனான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. தற்போது உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கடந்த வாரம் வரை இத்தாலியை உருகுலைத்து வந்த கொரோனா வைரஸ், தற்போது அமெரிக்காவை ஆட்டிபடைக்கிறது. 

கொரோனா பாதிப்பு முற்றிலும் நீங்கிவிட்டதாக கூறப்படும் சீனா கூட இன்று வரை 4வது இடத்தில் உள்ளது. ஆனால் அங்கிருந்து உலகம் முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸால், அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களில் உள்ளன. 

நேற்று ஒரே நாளில் மட்டும் அமெரிக்காவில் 22 ஆயிரத்து 613 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் கொரானா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 15 ஆயிரத்து 215 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் நேற்று ஒரே நாளில் 1000 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 110 ஆக அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் கொரோனாவால் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரை உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.