உலக நாடுகள் அனைத்தும் இப்போது ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கும் ஒரு விஷயம். அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்?.
உலக நாடுகளின் பெரிய அண்ணணாக யார் வரப்போகிறார் ?.
ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஹிலாரி கிளிண்டனா? அல்லது குடியரசுக்கட்சியைச் சேர்ந்தவரும் அரசியல் அனுபவமே இல்லாத தொழிலதிபர் டொனால்ட் டிரம்ப்பா?.
இது அனைத்து நாடுகளிலும் எழுந்துள்ள கேள்வி.

ஏனென்றால் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை, பொருளாதார ஆதரவு ஆகியவை உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை தீர்மானிக்கும் காரணிகளில் முக்கியமான ஒன்று என்றால் மிகையில்லை. அந்த அளவுக்கு முக்கியத்துவத்தை அமெரிக்க அதிபர் தேர்தல் பெற்று இருக்கிறது.
ஆனால், அமெரிக்க அரசியல் வரலாற்றை சற்று திருப்பிப் பார்த்தால், ஏறக்குறைய 150 ஆண்டுகளாக ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய இரு தேசிய கட்சிகள் மட்டுமே அந்நாட்டை ஆண்டு வந்து இருப்பது அறிய முடியும். இப்போதும் அந்த நாட்டில் இந்த இரு கட்சிகளும்தான் பிரதானமாக இருக்கின்றன.
மூன்றாவது தேசியக் கட்சி உருவாவதற்கோ, மாநிலக் கட்சிகள் எழுச்சி பெறவோ வாய்ப்பு மிகவும் குறைவு. ஒரு காலத்தில் இருந்திருக்கின்றன என்று மட்டுமே இப்போது கூற முடியும்.
ஆனால், அமெரிக்காவின் முதல் அதிபராக பொறுப்பேற்ற ஜார்ஜ் வாஷிங்டன் எந்த கட்சியையும் சாராமல் அதிபராக பொறுப்பேற்றார் என்றால் நம்பமுடிகிறதா?. அதன்பின் வந்த ஜெபர்சன், ஹாமில்டன் ஆகியோரால்தான் இன்றுள்ள குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சிக்கு வித்து ஊன்றப்பட்டது.
ஹாமில்டனின் கட்சி பெடரல் கட்சி(மத்தியகட்சி) என்றும், ஜெபர்சனின் கட்சி ஜனநாயக-குடியரசுக் கட்சி என்றும் தொடக்கத்தில் அழைக்கப்பட்டது. இதில் ஜெபர்சனின் கட்சி ஆட்சியைப் பிடித்து அவர் அதிபராகவும் பதவி வகித்தார்.

அதன்பின், 19-ம் நூற்றாண்டில் இரு கட்சிகளும் பல கட்டங்களில் பிளவுபட்டு சிதறன. இறுதியாக கடந்த 1869-ம் ஆண்டு ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி என்று மிகப் பெரிய கட்சிகள் உருவாகின.
அன்றில் இருந்து இன்று வரை அமெரிக்காவை இந்த இரு கட்சிகள்தான் பெரும்பான்மையாக மாறி, மாறி ஆட்சி செய்து வருகின்றன. அமெரிக்காவில் இதுவரை 57 முறை அதிபர் தேர்தல்கள் நடந்து இருக்கின்றன. அதில் 43 அதிபர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதில் 18 பேர் குடியரசுக் கட்சியையும், 15 பேர் ஜனநாயகக் கட்சியையும் சார்ந்தவர்கள் அதிபர்களாக பதவி வகித்து இருக்கிறார்கள்.
முதலில் குடியரசுக் கட்சியைக் கட்சியை பற்றி தெரிந்துகொள்வோம்(The Republiccan Party).
பழைமையான கட்சியான குடியரசுக் கட்சி 1854-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. அடிமை தனத்துக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர்கள், நவீன சிந்தனை கொண்டவர்களால் இந்த கட்சி தொடங்கப்பட்டது. அடிமைதனத்தை முடிவுக்கு கொண்டு வந்த ஆபிரகாம் லிங்கன் இந்த கட்சியைச் சேர்ந்தவர். இந்த கட்சிக்கு செல்லப் பெயராக ஆங்கிலத்தில் ‘ஜி.ஓ.பி.’(G.O.P.) அதாவது ‘கிராண்ட் ஓல்ட் பார்ட்டி’ என்று அழைப்பார்கள். இந்த பெயர் கடந்த 1875-ம் ஆண்டு அதிகாரப்பூர்வமானது.
குடியரசுக்கட்சியின் சின்னம் யானை. 1874-ம் ஆண்டு ஹார்பர் வாரஇதழில் இந்த கட்சிக்கென யானை சின்ன பயன்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அதுவே பின்பற்றப்பட்டது.
கொள்கைகள்
குடியரசுக்கட்சியினர் அமெரிக்க பழமைவாதத்தை ஆதரிப்பவர்கள், சுதந்திரமான சந்தை, முதலீடு, சுந்திரமான நிறுவனங்களை விரும்புபவர்கள். நாட்டின் பாதுகாப்பு வலிமையாக இருத்தல், தொழிலாளர் சங்கங்களை கட்டுப்படுத்துதல் போன்ற சித்தாந்தங்களுடன் இருப்பவர்கள்.

இந்த கட்சியின் முக்கிய நபராக கருதப்படுபவர் 1863-ம் ஆண்டில் அதிபராக இருந்த அமெரிக்காவில் அடிமை முறையை முடிவுக்கு கொண்டு வந்த ஆபிரகாம் லிங்கன்.
2-வது, 1917-ம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்த கட்சியைச் சேர்ந்த ஜென்னட் ராங்கின் என்ற பெண் முதன் முதலில் செனட்டராகப் பதவி ஏற்றார். இதன் மூலம் அமெரிக்க வரலாற்றில் குடியரசுக் கட்சிதான் பெண் ஒருவருக்கு செனட்டராகும் வாய்ப்பைக் கொடுத்தது.
3-வதாக 2001-ல் ஜார்ஜ் புஷ் அதிபராக இருந்தபோது, ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் கொட்டத்தையும், 2003-ல் ஈராக்கில் சதாம் உசேனுக்கு எதிராகப் போர்தொடுத்து, அவரை அழித்தது குறிப்பிடத்தகுந்தவைகளாகும். இவை இரண்டுமே முக்கிய சாதனையாக கருதப்படுகிறது.
ஜனநாயகக் கட்சி….(The Democratic Party)
ஜனநாயகக் கட்சி கடந்த 1828-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. உலகின் மிகப் பழமையான கட்சி, இன்னும் உயிரோடு இருக்கும் கட்சி என்றால் அது ஜனநாயகக் கட்சியைக் கூற முடியும். தாமஸ் ஜெபர்சன்(1801) மற்றும் ஜேம்ஸ் மேடிசன்(1809) ஆகியோர் இந்த கட்சியைச் சேர்ந்தவர்கள். இந்த கட்சியின் சின்னம் கழுதையாகும்.
தொடக்கத்தில் இந்த கட்சியைச் சேர்ந்தவர்கள் தங்களை, குடியரசுக் கட்சி என்ற பெயரிலேயை அழைத்தார்கள். ஆனால், அப்போதிருந்த எதிர்க்கட்சிகளான அடிப்படைவாதிகள், இவர்கள், ஜனநாயகத்துக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்ற வண்ணத்தைப் பூசி, இந்த கட்சியை ஜனநாயகக் கட்சி என்ற ெபயரில் அழைக்கத் தொடங்கினர். கடந்த 1844-ம் ஆண்டு இந்த கட்சிக்கு ஜனநாயகக் கட்சி என்ற பெயர் அதிகாரப்பூர்வமானது.

அமெரிக்க அதிபர்களில் மிகப் பிரபலமானவர்கள் பெரும்பாலும் இந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான். முதல்உலகப்போரில் பங்கு பெற்று உலகநாடுகள் சங்கம் உருவாகக் காரணமாக இருந்த உட்ரோ வில்சன்(34-வதுஅதிபர், 1913-21), 4 முறை அதிபராகத் தேர்வான ப்ராங்க்ளின் ரூஸ்வெல்ட் (37 முதல் 40-வது அதிபர், 1932-1940வரை அதிபர்), அதிபர் ஜான் கென்னடி(44-வது அதிபர்,1960-64),
அனைவரும் அறிந்த பில் கிளிண்டன் மற்றும் தற்போதுள்ள அதிபர் பாரக் ஒபாமா ஆகியோரும் இந்த கட்சியைச் சார்ந்தவர்களே.
அதுமட்டுமல்லாமல் அதிபராக பதவி ஏற்ற முதல் கத்தோலிக்கர் ஜான் கென்னடி, முதல் ஆப்பிரிக்கர் அமெரிக்கர் பாரக் ஒபாமா ஆகியோர் இந்த கட்சியினர்தான். ஹிலாரி அதிபரானால், முதல் பெண் அதிபரும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர் எனும் பெருமையைப் பெறுவார்.
கொள்கைகள்….
நவீன சுதந்திரத்துவத்துக்கு ஆதரவு, சமூக மற்றும் பொருளாதார சமத்துவம் மற்றும் மாநிலங்களின் நலனுக்கு முக்கியத்துவம். நாட்டின் பொருளாதாரத்தை ஒழுங்குபடுத்துதலில் அரசின் தலையீட்டை விரும்புதல், சமூக நலத்திட்டங்கள், தொழிலாளர் சங்கங்களுக்கு முக்கியத்துவம். ஒட்டுமொத்தமாக பார்த்தால், ஜனநாயகக் கட்சி பணக்காரர்கள் பக்கம் நிற்பதைக் காட்டிலும், அமெரிக்காவில் இருக்கும் நடுத்தர வர்கத்து மக்களின் பக்கம் இருப்பதையே விரும்புகிறது. அப்படியே வெளிப்படுத்திக்கொண்டு வருகிறது.
இந்த கட்சியின் முக்கியச் சாதனையாக வரலாற்றில் பார்த்தால், கடந்த 1920-ம் ஆண்டில் அதிபராக இருந்த உட்ரோ வில்சன், அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து, பெண்களும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை பெற்றுத் தந்தார்.
1935-ம் ஆண்டு அதிபராக இருந்த ப்ராங்களின் ரூஸ்வெல்ட், ஓய்வு பெறும் ஊழியர்கள், வேலையில்லா இளைஞர்கள், விதவைகள், அனாதைகளுக்கு சிறப்பு உதவித்திட்டத்தை முதன்முதலில் கொண்டு வந்தார்.
1960-களில் அதிபராக இருந்த ஜான் கென்னடியின் ஆட்சியில், நிலவுக்கு மனிதனை அனுப்பி சாதனைப் படைத்தது.
1964-ல் ஆட்சியில் இருந்த லிண்டன் பி ஜான்சன் சிவில் உரிமைச்சட்டத்தைக் கொண்டு வந்தார். இதன் மூலம் இனப்பாகுபாடு காட்டப்பட்டு கறுப்பர்களுக்கும், பெண்களுக்கும் கல்விக்கூடங்கள், பணியிடங்களில் ஒதுக்கிவைக்கப்பட்டு நடத்தப்பட்ட நிலை முடிவுக்கு வந்தது.
லிபரட்டேரியன் கட்சி
1971-ம் ஆண்டு லிபரட்டேரியன் கட்சி தொடங்கப்பட்டது. ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சிகளுக்கு அடுத்தார்போல், தேசிய அளவில் இருக்கும் 3-வது பெரிய கட்சியாகும். இதுவரை நாடாளுமன்றத்தில் ஒரு இடத்தைக்கூட பெற முடியவில்லை. பெரும்பாலும் மாநில அரசியலில்தான் ஆதிக்கம் செலுத்துகிறது.
க்ரீன் பார்ட்டி…
கடந்த 2001-ம் ஆண்டில் க்ரீன் பார்டி அதாவது எகோ சோசலிஸ்ட் கட்சி என்று கூறப்படுகிறது. இந்த கட்சியைச் சேர்ந்த ஜில் ஸ்டெயின் கடந்த 2012-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டு அமெரிக்க ேதர்தல் வரலாற்றில் அதிக வாக்குகளைப் பெற்ற பெண் எனும் பெருமையைப் பெற்றார்.
இந்த 4 கட்சிகள் அமெரிக்காவில் முக்கியக் கட்சிகளாக இருந்தபோதிலும், ஜனநாயகக்கட்சி, குடியரசுக் கட்சிகளுக்கு இடையேதான், எப்போதும் பிரதானப்போட்டி இருந்து வருகிறது. இந்த முறையும் அப்படித்தான் போட்டி இருக்கிறது..
எப்படி தமிழகத்தை கடந்த 50 ஆண்டுகளாக திமுக அதிமுக தவிர வேறு எந்த கட்சியும் ஆளமுடியவில்லையோ... அதே போல் அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியை தவிர வேறு எந்த கட்சியும் வரமுடியவில்லை.
யாருக்கு கிடைக்கப்போகிறது அதிபர் வாய்ப்பு என பொறுத்திருந்து பார்ப்போம்…
விலங்கையா. க
