கொரோனா வைரஸ் எதிரொலியாக  அமெரிக்கா மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில் தற்போது அதிக அளவில் அது சீனாவுக்கு பன்றி இறைச்சியை  ஏற்றுமதி செய்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது,  கடந்த ஆண்டுகளில் ஒப்பிடும்போது தற்போது சீனாவுக்கான  அமெரிக்காவின் பன்றி இறைச்சி ஏற்றுமதி நான்கு மடங்கு அதிகரித்திருப்பதாக ஆங்கில ஊடகங்கள் தெரிவித்துள்ளன .இதனால்  அமெரிக்க மக்களுக்கு பன்றி இறைச்சி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அது கோடை காலத்தில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும்  தகவல் வெளியாகி உள்ளது . கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது இதுவரையில் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இந்த வைரஸால் அமெரிக்காவே மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது ,  சுமார் 13 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது,  அமெரிக்காவில் கொரோனா வைரசால்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 81 ஆயிரத்தை கடந்துள்ளது . 

 

இந்நோயை கட்டுப்படுத்த அமெரிக்கா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும்போதிலும் அதில் பெரிய அளவில் பலன் இல்லை , அதேநேரத்தில் தொடர் ஊரடங்கால்  அமெரிக்காவின் பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது .  மக்களின் உயிரைக் காக்கும் அதேநேரத்தில் பொருளாதாரத்தையும் மீட்டெடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அமெரிக்கா தள்ளப்பட்டு இருக்கிறது ,  இந்நிலையில் கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவின் மீது அமெரிக்கா ஏகபோகமாக குற்றச்சாட்டுகளை  முன்வைத்து வரும் நிலையில் ,  வீழ்ச்சி அடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க சீனாவை சந்தையாக பயன்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா இறங்கியுள்ளது .  உலக அளவில் பன்றி இறைச்சியை  விரும்பி சாப்பிடும் மக்கள் சீனாவில் அதிகம் என்பதால் ,  தற்போது தங்களிடம் கையிருப்பில் உள்ள லட்சக்கணக்கான பன்றிகளை விற்று பொருளாதாரத்தை மீட்கும்  முயற்சிக்கு ஆரம்ப சூழி போட்டுள்ளது  அமெரிக்கா .  ஒரு புறம் கொரோனா வைரஸ் வாட்டி வரும் நிலையில்   மறுபுறம் சந்தை பொருளாதாரத்தை  திறந்துள்ளது அமெரிக்கா.  அதாவது கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி வரை சுமார் 17,479 பன்றி இறைச்சியை  சீனாவுக்கு  அமெரிக்க அனுப்பியுள்ளது. 

ஆனால்  கடந்த  ஆண்டு இது வெறும் 3 ஆயிரத்து 879 டன்கள் மட்டுமே என அமெரிக்க விவசாயத் துறையின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன , அதேபோல் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி அன்று 2 லட்சத்து 83 ஆயிரம் பன்றிகள் கறிக்காக வெட்டப்பட்டுள்ளன இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 40 சதவீதம் குறைவு எனவும் அதே புள்ளி விவரங்கள் கூறுகின்றன .  வர்ஜீனியாவை தளமாகக்  கொண்ட ஸ்மித் பீல்டு  ஃபுட்ஸ் என்ற நிறுவனம் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் சீனாவிற்கு அதிக அளவில் பன்றி இறைச்சி ஏற்றுமதி செய்துள்ளது .  கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் குறைந்தது 13.680 டன் பன்றி  இறைச்சியை கப்பல் மூலமாக சீனாவுக்கு ஏற்றுமதி செய்திருப்பதாக  ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி  வெளியிட்டுள்ளது . ஹாங்காங்கை  தளமாகக் கொண்ட WH குழுமத்திற்கு சொந்தமான இந்நிறுவனம் வைரசால் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி அமெரிக்காவின் ஒட்டுமொத்த பன்றி இறைச்சி வியாபாரத்தையே நாசமாக்கி விட்டது என கடந்தமாதம் கவலை தெரிவித்திருந்தது ,  கடந்த மாதம் இறைச்சி நிறுவனங்கள் குறித்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் அனைத்து இறைச்சி நிறுவனங்களும் தங்கள் ஆலைகளை திறக்க தயாராக இருங்கள் என அழைப்பு விடுத்திருந்தார் ,

 

ஆனால் மீண்டும் திறக்கப்பட்டுள்ள இறைச்சி  கூடங்கள் தற்போது பாதிக்கும் குறைவாகவே உற்பத்தி செய்து வருவதாக தி போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது .  உலகின் மிகப்பெரிய பன்றி இறைச்சி  நிறுவனமான ஸ்மித்பீல்டு தனது வர்ஜினியா ஆலையை அமெரிக்கர்களின் தேவைக்காக மறுசீரமைப்பு செய்து  அதிக அளவில் பன்றி இறைச்சியை உற்பத்தி செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது . அதேபோல்  மிகப்பெரிய பன்றி இறைச்சி சந்தையாக கருதப்படும் சீனா கடந்த 2018 ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவில் பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து , அமெரிக்காவில் இருந்து அதிக அளவில் பன்றி இறைச்சியை இறக்குமதி செய்து வருவதாக ராய்ட்டர்ஸ்  தெரிவித்துள்ளது இரு நாடுகளுக்கும் இடையிலான ஜனவரி வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் இந்த ஆண்டு அமெரிக்க பண்ணைப் பொருட்களின்  கொள்முதலை குறைந்தபட்சம் 12.5 பில்லியன் டாலர்களாக  உயர்த்த சீனா உறுதி அளித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.