உலகச் சுகாதார நிறுவனத்திற்கு சீனா எவ்வளவு நிதி வழங்குகிறதோ அதே அளவிற்கான நிதி வழங்குவது குறித்து அமெரிக்கா ஆலோசித்து வருவதாக  பிரபல செய்தி நாளேடான நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது .  அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உலகச் சுகாதார நிறுவனத்திற்கு அமெரிக்கா சார்பில் வழங்கி வந்த நிதியை நிறுத்தியுள்ள நிலையில் இந்தச் செய்தி வெளியாகியுள்ளது .  கடந்த ஆண்டு  டிசம்பர் மாதம் இறுதியில் சீனாவின் வூபே மாகாணம்  வுஹான் நகரில்  தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது .  இதுவரையில்  46 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் , உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சமாக உயர்ந்துள்ளது .  சீனாவில் தோன்றிய  இந்த வைரஸ் அமெரிக்காவை முற்றிலும் நிலைகுலைய செய்துள்ளது .  அமெரிக்காவின் மொத்த கோபமும் சீனா மீது திரும்பியுள்ள நிலையில், கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனாதான் காரணம் ,  அது முன் கூட்டியே இந்த வைரஸ் பரவலை தடுத்திருக்க முடியும் , ஆனால் சீனா அதை செய்ய தவறிவிட்டது , தெரிந்தே இந்த தவறை அது செய்துள்ளது என அமெரிக்க அதிபர் சீனாமீது அடுக்கடுக்காக குற்றஞ்சாட்டினார், 

அது மட்டுமின்றி  சீனாவில் வுஹான் ஆய்வுக் கூடத்திலிருந்துதான்  இந்த வைரஸ் கசிந்தது என்றும் அதற்கான ஆதாரங்கள் தங்களிடம் நிறைய உள்ளது என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ சீனாவை தாக்கினார்.  இதற்கிடையில் உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக  குற்றம்சாட்டிய அதிபர் ட்ரம்ப்  சீனாவுக்கு துதிபாடும் அமைப்பாக அந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆபத்து நிறைந்த இந்த வைரஸ் பரவலை முன் கூட்டியே  அறிந்து உலக நாடுகளை எச்சரிக்கை தவறிவிட்டது என WHO மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்த ட்ரம்ப் அந்நிறுவனத்திற்கு  வழங்கி வந்த நிதியை நிறுத்தினார்.  அமெரிக்காவின் குற்றச்சாட்டை நிராகரித்த உலக சுகாதார நிறுவனம் ,  கொரோனா என்ற கண்ணுக்கு தெரியாத எதிரியை ஒன்றிணைந்து எதிர்த்து போராட வேண்டிய நேரம் இது,   அமெரிக்காவும் சீனாவும் ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டுவதை தவிர்த்து இணைந்து செயல்பட முன்வரவேண்டும் என WHO வலியுறுத்தியது. மேலும்  சீனாவும் இதே கருத்தை முன் வைத்து வருகிறது.   இது மட்டுமின்றி பல சர்வதேச நாடுகளும் உலக சுகாதார நிறுவனத்திற்கு நிறுத்தப்பட்ட நிதி குறித்து அமெரிக்கா மறு பரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. 

  

இந்நிலையில் இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள ஆங்கில நாளேடு ஒன்று,   உலக சுகாதார நிறுவனத்திற்கு நிதி வழங்குவது குறித்து அமெரிக்கா மீண்டும் மறுபரிசீலனை செய்து வருவதாகவும் ஆனால் சீனா எவ்வளவு நிதி வழங்கி வருகிறதோ அதே அளவிற்கான நிதியே வழங்க முடிவு செய்திருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது. ஆனால் இதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று சொல்ல முடியாது என்று அந்த நாளேடு கூறியுள்ளது.   ஏற்கனவே அமெரிக்கா வெளியிட்டுள்ள கணக்கின்படி சீனா ஆண்டுக்கு 30 மில்லியன் டாலர்கள் WHO - க்கு வழங்குவதாகவும் ஆனால் அதைவிட பன்மடங்கு அமெரிக்கா வழங்கி வந்ததாகவும் கூறியது .  அதாவது ஆண்டுக்கு அமெரிக்கா 400 முதல் 500 மில்லியன் டாலர்கள் வரை வழங்கி வந்ததாகவும் தெரிவித்திருந்தது இதற்கிடையில் அமெரிக்கா நிதி நிறுத்தியதை அடுத்து கூடுதலாக 30 மில்லியன் டாலர்களை வழங்க சீனா முன் வந்துள்ளது ,  ஆக   ஒருவேளை அமெரிக்கா நிதி வழங்குவதாக இருந்தால்  60 மில்லியன் டாலர் அளவுக்கு வழங்கக் கூடும்  என தகவல்கள் வெளியாகி உள்ளன.