கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தினருடன் போராடி உயிர்நீத்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அமெரிக்கா தனது இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளது. இதுவரையில் சர்வதேச  அளவிலான நாடுகள்,  இருநாடுகளும் சமாதான பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும் என கூறியதே தவிற, சீனர்கள் நடத்திய கொடூர தாக்குதலை கண்டிக்கவோ, அல்லது இந்திய வீரர்கள் மரணத்திற்கு இரங்கள் தெரிவிக்கவோ இல்லை. இந்நிலையில் இந்திய வீரர்கள் உயிரிழந்ததற்கு அமெரிக்கா தனது இரங்லை பதிவி செய்துள்ளது. இதன் மூலம் அந்நாட்டின் ஆதரவு இந்தியாவிற்கு இருக்கிறது என்பதையும் இந்தியாவின் பக்கம் உள்ள நியாயத்தை அந்நாடு புரிந்து கொண்டுள்ளது என்பதையும் இந்த இரங்கல் செய்தி வெளிபடுத்தியுள்ளது. கடந்த ஒரு மாதகாலத்திற்கும் மேலாக இந்திய-சீன எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது,  அதாவது கடந்த மே-22 ஆம் தேதி பாங்கொங் த்சோ மற்றும் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா அத்துமீறியதாக கூறி  சீனா எல்லையில் ராணுவத்தை குவித்தது. 

அதைத்தொடர்ந்து இந்தியாவும் ராணுவம் மற்றும் ராணுவ தளவாடங்களை குவித்ததால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் இருநாட்டுக்கும் இடையிலான பிரச்சினையை பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்த்துக்கொள்ள இருநாடுகளும் முன்வந்த நிலையில், ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திங்கட்கிழமை இரவு இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தினரை  இந்தியப் படையினர் தடுத்ததால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, அதில் சீனர்கள் தாக்குதல் நடத்த ஏற்கனவே தயாராக இருந்ததால்  பயங்கர ஆயுதங்களை கொண்டு இந்திய ராணுவ வீரர்களை கடுமையாக தாக்கினர் அதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.  இதுவரை இல்லாத பேரிழப்பாக இந்த இது கருதப்படுகிறது. இந்நிலையில் , பல சர்வதேச நாடுகள் இந்தியா- சீனா ஆகிய இருநாடுகளும் சமாதான பேச்சு வார்த்தைகள் மூலம் பிரச்சனையை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், இரு நாடுகளின் அமைதியை விரும்புவதாகவும் தெரிவித்தன , ஆனால்  இந்திய எல்லையில் சீனா நடத்திய அராஜகத்தை ஒருவரும் கண்டிக்கவில்லை, வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களுக்கு இரங்கலும் தெரிவிக்கவில்லை. 

இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ இந்திய லடாக் எல்லையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில்  தனது வீரர்களை இழந்துள்ள இந்தியாவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன், சீனாவுடனான எல்லை மோதலில் தங்கள் வீரர்களை இழந்த  இந்திய மக்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என கூறியுள்ளார். அதாவது சீன உயர் தூதர் யாங் ஜீச்சியை சந்தித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு பாம்பியோ இவ்வாறு ட்வீட் செய்துள்ளார். மேலும் அதில் ராணுவ வீரர்களின் குடும்பங்கள் மற்றும் துயரத்தில் உள்ள அவர்களின் அன்புக்குரியவர்களை நாங்கள் நினைவில் கொள்வோம் என கூறியுள்ளார். முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி கிழக்கு லடாக்கின் உண்மையான கட்டுப்பாட்டு வரிசையில் இந்திய மற்றும் சீன படைகளுக்கு இடையிலான நிலைமையை நன்கு அறிந்திருக்கிறார் எனவும்,  அதை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது என்றும் வெள்ளை மாளிகையின்  செய்தி தொடர்பாளர் கெய்லீ மெக்னானி தெரிவித்தார்.  மேலும் இரு நாடுகளுக்கும் இடையேயான மோதலில் 20 இந்திய வீரர்கள் இறந்தனர் என்ற இந்திய ராணுவ அறிக்கையை நாங்கள் கண்டோம் அதற்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என அவர் கூறியிருந்தது குறிப்பிடதக்கது.