விசா வழங்க தடை விதிக்கப்பட்டுள்ள பட்டியலில் பாகிஸ்தான்?.. அமெரிக்கா அதிரடி….

பயங்கரவாத செயல்களை தடுக்‍கும் விதமாக ஈராக், ஈரான் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்‍கு விசா வழங்க அமெரிக்‍கா விதித்துள்ள தடை பட்டியலில், பாகிஸ்தானும் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக அமெரிக்‍க அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

அமெரிக்‍காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் பல அதிரடி நடவடிக்‍கைகளை மேற்கொண்டு வருகிறார்.

வேலைவாய்ப்பு, சுற்றுலா ஆகிய காரணங்களுக்‍காக அமெரிக்‍கா வரும் வெளிநாட்டவர்களுக்‍கு கட்டுப்பாடுகள் விதிக்‍கப்படும் என தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர் அளித்த வாக்‍குறுதிக்‍கு ஏற்ப நடவடிக்‍கைகளை மேற்கொண்டுள்ளார்.

Iran, Libya, Sudan, Yemen உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த மக்‍களுக்‍கு அமெரிக்‍கா வர விசா வழங்கப்படமாட்டாது என அதிபர் ​டிரம்ப் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்தார்.

அமெரிக்‍காவில் நடைபெறும் பயங்கரவாத செயல்களுக்‍கு இந்த நாடுகளை சேர்ந்தவர்களே பெரும்பாலும் காரணமாக இருப்பதால், அதனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்‍கை எடுக்‍கப்பட்டிருப்பதாக அமெரிக்‍க அரசு தெரிவித்தது.

இதற்கு உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்திருக்‍கும் நிலையில், இந்தப் பட்டியலில் பாகிஸ்தானும் இடம்பெற வாய்ப்பு இருப்பதாக வெள்ளை மாளிகை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்‍கின்றன.

அந்நாட்டில் இருந்து அமெரிக்‍கா வருவோருக்‍கான விசா நடைமுறைகளை கட்டுப்படுத்துவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் அஃப்கனிஸ்தான் நாட்டினருக்‍கான விசா நடைமுறைகளையும் கட்டுப்படுத்தப்போவதாக அமெரிக்‍கா அரசு கூறியுள்ளது.