அமெரிக்கா - மெக்சிகோ இடையே தடுப்புச் சுவர் எழுப்புவதற்கு நிதி கேட்ட விவகாரத்தில் டொனால் டிரம்ப்பின் அதிரடியான பேச்சால் அமெரிக்க பயணத்தை ரத்து செய்தார் மெக்சிகோ அதிபர். இதனால் இருநாடுகள் இடையே விரிசல் மேலும் அதிகரித்துள்ளது.
மெக்சிகோவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் ஊடுருவல், போதைப்பொருள் கடத்தல் என்பது சாதாரண நிகழ்வாக உள்ளதாகவும், இதனால், அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது, தான் வெற்றி பெற்றால் மெக்சிகோவுடனான எல்லையில் தடுப்புச்சுவர் கட்டப்படும் என்றும், மேலும், தடுப்புச் சுவர் கட்டுவதற்கான செலவை மெக்சிகோ ஈடுசெய்ய வேண்டும் என Donald Trump அறிவித்தார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபராக பதவி ஏற்ற Donald Trump, அமெரிக்கா - மெக்சிகோ எல்லையில் 3 ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தொலைவுக்கு தடுப்புச் சுவர் கட்டுவதற்கான உத்தரவை பிறப்பித்தார்.
Donald Trump-ன் இந்த உத்தரவுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த மெக்சிகோ அதிபர் Enrique Pena Nieto, சுவர்களில் மெக்சிகோவுக்கு நம்பிக்கை இல்லை என்றும், இந்த சுவருக்காக மெக்சிகோ எந்தப் பணமும் தராது எனவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், மெக்சிகோ அதிபருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் Donald Trump தனது டுவிட்டர் பக்கத்தில் ,"தடுப்புச் சுவர் கட்டுவதற்கு மெக்சிகோ பணம் தர விருப்பம் இல்லையெனில், மெக்சிகோ அதிபர் தனது அமெரிக்க பயணத்தை ரத்து செய்வதே சிறப்பாக இருக்கும்" என காரசாரமான கருத்துக்களை பதிவு செய்திருந்தார்.
இதனிடையே, வரும் 31ம் தேதி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளவிருந்த மெக்சிகோ அதிபர் Enrique Pena Nieto பயணத்தை ரத்து செய்துள்ளார். இது அமெரிக்கா - மெக்சிகோ இடையே உள்ள விரிசலை மேலும் அதிகரித்துள்ளது.
