அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முந்தைய நாள் அந்நாட்டில் முக்கிய மாநிலங்களில் திடீர் தாக்குதல் நடத்த அல் கொய்தா தீவிரவாதிகள் இயக்கம் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக, அமெரிக்க உளவுத்துறை(எப்.பி.ஐ.) திடீர் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

குறிப்பாக, நியூயார்க், டெக்சாஸ், விர்ஜினியா உள்ளிட்ட மாநிலங்களுக்கு உச்ச கட்டபாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யக் கோரி எப்.பி.ஐ. கேட்டுக்கொண்டுள்ளது. 

இந்த மாநிலங்களில் எந்த இடங்களை குறிப்பாக தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்பது குறித்து அமெரிக்க எப்.பி.ஐ. தெரிவிக்கவில்லை. அதேசமயம், தீவிரவாத தடுப்படையினர் எந்நேரமும் விழிப்புடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

இது குறித்து அமெரிக்க எப்.பி.ஐ. விடுத்துள்ள அறிக்கையில், " அமெரிக்காவுக்கு எதிராக தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால், அதை எதிர்கொள்ளும் வகையில் தீவிரவாத தடுப்புப்படையினர், மாநில போலீசார், சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் அனைவரும் தயார் நிலையில் இருக்கும் வகையில் கேட்டுக்கொள்கிறோம் " எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ரகசிய தகவலைத் தொடர்ந்து எப்.பி.ஐ. அதிகாரிகள் மாநில அரசுகள், மத்திய அரசு, மற்றம் எம்.பி.களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகின்றனர். 

அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டன், மற்றும் டொனால்ட் டிரம்ப் இருவரில், யாருக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும் எனக் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு தேர்தல் களம் பரபரப்பாகி வருகிறது. 

இதற்கிடையே அமெரிக்க தேர்தலை சீர்குலைக்க ரஷிய ஹேக்கர்கள் சதித்திட்டம் தீட்டி வருவதாக வதந்திகள் பரப்பப்பட்டு அச்சத்தை உண்டாக்கி வரும் நிலையில், இந்த தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை அந்நாட்டு மக்களை பெரிதும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையடுத்து வரும் 8-ந்தேதியான தேர்தல் நாள் அன்று, இணையதளம் வழியாக ஹேக்கர்கள் தாக்குதல் நடத்தி, தேர்தலை முடக்கக்கூடும் என்பதால் அதை சமாளிக்கவும் தனிப்படை அமைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.