ரஷ்யாவில் எய்ட்ஸ் நோயால் அதிகம்பேர் பாதிக்கப்பட்டிருப்பதால், HIV பரிசோதனை உள்ளிட்ட நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளது.
மனித சமுதாயத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது. எனினும், சில நாடுகளில் எய்ட்சால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.
ரஷ்யாவின் Yekaterinburg என்ற நகரில் HIV நோய் தொற்றால் பலர் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்தது. எனவே, இதற்கான பரிசோதனைகளை செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தியது.
இதையடுத்து, அந்நகரின் பல்வேறு இடங்களில் நடமாடும் பரிசோதனை கூடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த பரிசோதனை கூடங்கள் முன்பாக பலரும் வரிசையில் நின்று HIV பரிசோதனை செய்து வருகின்றனர்.
Yekaterinburg நகரின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 2 சதவீதம் பேருக்கு HIV தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டிருப்பதால், அந்நோயின் பாதிப்பில் இருந்து அவர்களை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் இந்த விஷயத்தில் ரஷ்ய அரசு தோல்வியடைந்துள்ளதாகவும், வெளிநாடுகளிடம் இருந்து அது பாடம்கற்க வேண்டும் என்றும், அந்நாட்டில் செயல்பட்டு வரும் சமூக அமைப்புகள் விமர்சித்திருப்பதோடு, கடும் கண்டனமும் தெரிவித்துள்ளன.
