அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொழிலதிபர் எலான் மஸ்க்கின் காலில் முத்தமிடுவது போல செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வீடியோ அமெரிக்க அரசு கட்டிடத்தில் ஒளிபரப்பானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எலான் மஸ்க்கின் கால்களை வருடி முத்தமிடுவது போல் சித்தரித்து செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு வீடியோ, அந்நாட்டு அரசு அலுவலகத்திலேயே காட்சிப்படுத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையின் (HUD) கட்டிடத்தில் உள்ள தொலைக்காட்சி திரைகளில் இந்த AI வீடியோ ஒளிபரப்பப்பட்டது. இது இருவரின் உறவை கேலி செய்வது போல் இருந்தது என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க நாளிதழ் ஒன்றில் அறிக்கையில், "டிரம்ப் கடந்த வாரம் ட்ரூத் சோஷியல் தளத்தில் "Long Live the King!" என்று எழுதிய பதிவைக் குறிக்கும் வகையில், AI மூலம் உருவாக்கப்பட்ட வீடியோவில் "Long live the real king" என்ற வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன" என்று குறிப்பிட்டிருக்கிறது.
"இது வரி செலுத்துவோரின் பணம் மற்றும் வளங்களை வீணடிக்கும் செயல். சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்," என்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையின் செய்தித் தொடர்பாளர் கேஸி லோவெட் தெரிவித்துள்ளார்.
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் எக்ஸ் சமூக ஊடக தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க், டிரம்பின் வலுவான கூட்டாளிகளில் ஒருவராக மாறியுள்ளார். மேலும் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்வது உட்பட, அதிக அதிகாரத்தை டிரம்ப் அவரிடம் வாரி வழங்கியுள்ளார். செலவுகள் மற்றும் ஊழியர்களை குறைப்பது குறித்து நிர்வாகத்திற்கு ஆலோசனை வழங்கும் அரசு செயல்திறன் துறைக்கு தலைமையேற்று வழிநடத்த எலான் மஸ்கை டொனால்டு டிரம்ப் நியமித்துள்ளார்.
முன்னாதக, அரசு ஊழியர்கள் கடந்த வாரம் தாங்கள் செய்த ஐந்து விஷயங்களை பட்டியலிட்டு ஒரு மின்னஞ்சலுக்கு பதிலளிக்க வேண்டும் என்று எலான் மஸ்க் எக்ஸ் தளத்தில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. பதிலளிக்கத் தவறினால் அது ராஜினாமா செய்துவிட்டதாகக் கருதப்படும் எனவும் அவர் கூறினார்.
பல ஏஜென்சிகள் தங்கள் ஊழியர்களை பதிலளிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியதாகவும் செய்திகள் வெளியாயின. பணியாளர் மேலாண்மை அலுவலகம் 2.3 மில்லியன் ஊழியர்களுக்கு இது தொடர்பாக மின்னஞ்சல் அனுப்பியது எனவும் கூறப்படுகிறது.
