இஸ்லாமிய மக்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று புனித ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பது ஆகும். இறை வசனங்கள் இறக்கப்பட்ட சிறப்பு மிகுந்த ரமலான் மாதத்தின் அனைத்து நாட்களிலும் அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்பாக நோன்பு தொடங்கும் இஸ்லாமிய மக்கள் நாள் முழுவதும் தண்ணீர் கூட அருந்தாமல் மாலை வரை கடைபிடித்து சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு நோன்பை திறப்பார்கள். 30 நாட்கள் கடைபிடிக்கப்படும் நோன்பின் இறுதி நாளில் பிறை தென்படுவதை அடிப்படையாகக்கொண்டு ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்.

இந்த நிலையில் இந்த வருடத்திற்கான ரமலான் நோன்பு கடந்த ஏப்ரல் 25ம் தேதி தொடங்கியது. அதன்படி ஒரு மாத காலமாக இஸ்லாமியர்கள் நோன்பு வைத்து வந்தனர். நோன்பின் இறுதிகாலம் நெருங்கியதை அடுத்து பல்வேறு நாடுகளிலும் நேற்று பிறை தென்பட்டது. இதையடுத்து பிறை தென்பட்ட நாடுகளில் இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதனிடையே ரமலானை முன்னிட்டு ஆப்கானிஸ்தானில் 3 நாட்கள் போர் நிறுத்தம் செய்வதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

 

இஸ்லாமிய நாடான ஆப்கானிஸ்தானில் அரசு படைக்கும், தலிபான் பயங்கரவாத அமைப்புகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு 3 நாட்கள் போர் நிறுத்தத்திற்கு தலிபான்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இதுகுறித்து கூறியிருக்கும் தலிபான்கள் செய்தி தொடர்பாளர் ஸாபிஹுல்லா முஜாஹித், எந்த இடத்திலும் தாங்கள் தாக்குதல் நடத்த மாட்டோம் எனவும் அதே நேரத்தில் எதிரிகள் தாக்கினால் தங்களை தற்காத்து கொள்ளுமாறும் தலிபான்களுக்கு அறிவுறித்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தலிபான்களின் போர் நிறுத்தத்திற்கு அதிபர் அஷ்ரப் கானி வரவேற்பு தெரிவித்துள்ளார். தேவையின்றி தாக்குதல்கள் நடத்த வேண்டாம் என அரசு படைகளுக்கு அவர் உத்தரவிட்டிருக்கிறார்.