ஆப்கானிஸ்தானில் மசூதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 62-ஆக உயர்ந்துள்ளது. இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

ஆப்கானிஸ்தான் நாட்டின் நங்கர்கார் மாகாணத்தில் ஹஸ்கா மினா மாவட்டம் உள்ளது. இம்மாவட்டதின் ஜலலாபாதில் பகுதியில் உள்ள மசூதிக்கு வெள்ளிக்கிழமையான நேற்று வழக்கம்போல் மக்கள் தொழுகைக்கு சென்றனர். தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது சுமார் 2 மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் மசூதியில் குண்டு வெடித்தது.

இதில், மசூதியின் கூரை தகர்ந்து சரிந்தது. இந்த குண்டு வெடிப்பில், 62 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. குண்டு வெடிப்பில், மசூதி முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு, எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என்றாலும், தலிபான் தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் நடக்கும் வன்முறைகளை, எந்த வகையிலும் ஏற்க முடியாது. தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு, அப்பாவி மக்கள் உயிரிழக்கின்றனர் என ஐ.நா, சார்பில், சமீபத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட அடுத்த சில நாட்களில், மசூதியில் இந்த கொடூர தாக்குதல் நடைபெற்றுள்ளது.