ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி பேசிய தேர்தல் பிரச்சார கூட்டத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 30 பேர் உடல் சிதறி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஆப்கானிஸ்தான் நாட்டு மேற்கு பகுதியில் தலிபான் தீவிரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய தீவிரவாதிகள் குழுக்கள் இணைந்து அவ்வப்போது தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். சில பகுதிகளை கைப்பற்றி அங்கு உள்ளூர் வரிவிதிப்பு உள்ளிட்ட நிர்வாகங்களை தங்கள் வசப்படுத்தியுள்ள தலிபான்கள் போட்டி அரசாங்கத்தை நடத்தி வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் தற்கொலைப்படை தாக்குதல்களையும் அரங்கேற்றி வருகின்றனர்.

 

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அதிபர் பதவிக்கு வரும் 28-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, பர்வான் மாகாணத்தில் உள்ள சரிக்கார் நகரத்தில் அதிபர் அஷ்ரப் கானி இன்று தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசத் தொடங்கினார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் தற்கொலை படை தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. 

இந்த தாக்குதலில் 30 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதல் நடைபெற்ற சில நிமிடங்களில் தலைநகர் காபூலில் உள்ள மசூத் சதுக்கம், அமெரிக்க தூதரகம் அருகேவும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் உயிழந்தோர் விவரம் எதுவும் வெளியாகவில்லை.