ஆப்கானிஸ்தானில் தேசிய நெடுஞ்சாலையில் தீவிரவாதிகள் மறைத்து வைத்திருந்த சக்திவாய்ந்த வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் 35 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். 27 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெராத் பகுதியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்தில் சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது, காந்தகார் தேசிய நெடுஞ்சாலையில் வந்துக்கொண்டிருந்த போது தீவிரவாதிகள் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில், 4 குழந்தைகள் உட்பட 35 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். 27 பேர் படுகாயமடைந்தனர். 

இது தொடர்பாக போலீசாருக்கும் மீட்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இது தலிபான் தீவிரவாதிகளின் வேலையாக இருக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.