மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர்‍ இ தொய்பா தளபதி பாகிஸ்தானில் உயிரிழப்பு!

லஷ்கர்‍ இ தொய்பாவின் மூத்த தளபதியும், மும்பை தாக்குதலுக்கு சதி செய்தவருமான அப்துல் ரஹ்மான் மக்கி பாகிஸ்தானில் உயிரிழந்தார். 
 

Abdul Rehman Makki senior commander of Lashkar e Taiba has died in Pakistan ray

பயங்கரவாத தளபதி 

பயங்கரவாத இயக்கமான லஷ்கர்-இ-தொய்பாவின் மூத்த தளபதி அப்துல் ரஹ்மான் மக்கி. இவரது தலைமையின் கீழ் லஷ்கர்-இ-தொய்பா இயக்கம் பல்வேறு இடங்களில் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்நிலையில், அப்துல் ரஹ்மான் மக்கி பாகிஸ்தானின் லாகூரில் இன்று மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அப்துல் ரஹ்மான் மக்கிக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. லாகூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தான் அவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். ''அப்துல் ரஹ்மான் மக்கி இன்று அதிகாலையில் மருத்துவமனையில் உயிரிழந்தார்'' என்று ஜமாத்-உத்-தவா அதிகாரி ஒருவர் PTI செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியுள்ளார். 

ஹபீஸ் முகமது சயீத்தின் உறவினர் 

அப்துல் ரஹ்மான் மக்கி பாகிஸ்தானின் பயங்கரவாத அரசியல் அமைப்பான ஜமாத்-உத்-தவாவின் (JuD) இரண்டாவது தளபதியாகவும், கொடிய பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் முக்கிய தளபதியாகவும் இருந்தவர். இவர் இந்தியாவால் தேடப்படும் சர்வதேச பயங்கரவாதி ஹபீஸ் முகமது சயீத்தின் மைத்துனர் ஆவார்.

கடந்த 2020 ஆம் ஆண்டில் ப‌யங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்ததற்காக ஒரு பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் அப்துல் ரஹ்மான் மக்கிக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதித்தது. தண்டனையைத் தொடர்ந்து, அவர் பொதுவெளியில் தோன்றுவதைத் தவிர்த்து தலைமறைவாக இருந்து வந்தார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் UNSC அப்துல் ரஹ்மான் மக்கியை உலகளாவிய பயங்கரவாதியாக அறிவித்தது. இது ஐ.நா. பொருளாதாரத் தடையின் கீழ் அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டன. பயணம் செய்யவும் தடை விதிக்கப்பட்டது. 

மும்பை தாக்குதலுக்கு மூளை 

சமூகநல செயல்பாடுகள் என்ற போர்வையில் நிதி திரட்டுவதிலும், தீவிரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதிலும் மக்கி முக்கிய பங்கு வகித்ததாக பல ஆண்டுகளாக குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து ஐ.நா இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்தது. கடந்த 2000ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி இந்தியாவின் டெல்லியில் உள்ள செங்கோட்டையின் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது.

லஷ்கர்-இ-தொய்பா நடத்திய இந்த தாக்குதலுக்கு திட்டமிட்டவர் அப்துல் ரஹ்மான் மக்கி. இதேபோல் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் ஹோட்டல் உள்ளிட்ட பல இடங்களில் லஷ்கர்-இ-தொய்பா பயங்ரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 175 பேர் கொல்லப்பட்டனர்; 300க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தவர்கள். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதும்  அப்துல் ரஹ்மான் மக்கி தான் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios