நேபாளத்தில் ரிசார்ட் ஒன்றின் கேரளாவை சேர்ந்த 5 குழந்தைகள் உள்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

நேபாளம் நாட்டில் மலைப்பாங்கான பகுதிகளும், அருவிகளும் நிறைய உள்ளன. இயற்கை அழகை ரசிக்க பல்வேறு நாட்டினரும் அங்கு சுற்றுலா வருவது உண்டு. இந்நிலையில், விடுமுறை நாட்களை கொண்டாட கேரளாவைச் சேர்ந்த 15 சுற்றுலாப் பயணிகள் நேபாளத்தின் பிரபல மலை சுற்றுலாத்தளமான போகாராவிற்கு சென்றிருந்தனர். அவர்கள் மகவான்பூர் மாவட்டத்தின் டமான் பகுதியில் உள்ள எவரெஸ்ட் பனொரமா ரிசார்ட்டில் நேற்று இரவு தங்கினர். 

4 அறைகள் முன்பதிவு செய்திருந்த போதிலும், ஒரு அறையில் 8 பேரும், மீதமுள்ள அறையில் மற்ற 7 பேரும் தங்கினர். இந்நிலையில், அந்த அறையில் 8 பேரும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் குளிரான அப்பகுதிகளில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளிலும் அறையை வெதுவெதுப்பாக வைத்திருக்க கேஸ் ஹீட்டர்கள் இருப்பது வழக்கம். ஜன்னல்கள், கதவுகள் அனைத்தும் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த நிலையில், அறையில் உள்ள கேஸ் ஹீட்டரை ஆன் செய்ததும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இவர்களது உடலை இந்தியாவுக்கு கொண்டு வர கேரள முதல்வர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.