பெய்ரூட், அக். 19:-
சிரியாவின் அலெப்போ நகரின் கிழக்குப் பகுதியில் 8 மணி நேரம் சண்டை நிறுத்தம் செய்ய ரஷியா, சிரியா ராணுவம் ஒப்புக் கொண்டுள்ளன. இந்த சண்டை நிறுத்தம் நாளை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைமுறையில் இருக்கும்.
அதேசமயம், ரஷியா ராணுவம் நடத்திய வான்வழித்தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 36 பேர் கொல்லப்பட்டனர் என மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
நாளை நடைமுறைக்கு வர இருக்கும் இந்த 8 மணி நேர சண்டை நிறுத்தத்துக்கு, மனிதநேய அடிப்படையில் இரு நாட்டு ராணுவங்களும் ஒப்புதல் அளித்துள்ளன என ரஷியாவின் லெப்டினென்ட் ஜெனரல் செர்ஜி ருட்ஸ்கோய் தெரிவித்தார். இந்த சண்டை நிறுத்தம் நடைமுறையில் இருக்கும் போது, சண்டையில் காயத்தால் பாதிக்கப்பட்ட தீவிரவாதிகள், நோயினால் பீடிக்கப்பட்ட மக்கள், காயமடைந்தவர்கள் அருகில் உள்ள இத்லிக் நகருக்கு இடம் பெயர வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஐ.நா. மனித உரிமை அதிகாரிகள், இந்த சண்டை நிறுத்தம் 8 மணி நேரத்துக்கு பதிலாக, 48 மணி நேரம் இருக்குமாறு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த 48 மணிநேரத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மனிதநேய உதவிகளை செய்ய வாய்ப்பாக அமையும் என ஐ.நா. அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக கிளர்ச்சியாளர்கள், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக சிரியா, ரஷியா ராணுவப்படைகள் விமானத் தாக்குதல்களை அதிகப்படுத்தி இருப்பதால், நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர், ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். பல அடுக்குமாடி கட்டிடங்கள் மண்ணில் புதைந்து, தரைமட்டமாகியுள்ளன.
ஐ.நா.வுக்கான ரஷிய தூதர் விடாலி சுர்கின் கூறுகையில், “ 8 மணிநேர சண்டை நிறுத்தம் என்பது ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவு. ஆனால், 48 மணிநேரம் அல்லது 72 மணிநேர சண்டை நிறுத்தத்தை செயல்படுத்த பரஸ்பர ஒப்பந்தங்கள் செய்யப்பட வேண்டியது அவசியமாகும்'' என்று தெரிவித்தார்.
