வைரலாகும் எலான் மஸ்க்-ன் பழைய டுவிட்... என்ன சொல்லி இருக்காரு பாருங்க!
எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவது உறுதியாகி இருக்கும் நிலையில், அவர் பதிவிட்ட பழைய டுவிட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
எலான் மஸ்க் ஒருவழியாக டுவிட்டர் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை வாங்குவது உறுதியாகி இருக்கிறது. டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் 44 பில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்க இருக்கிறார். டுவிட்டர் நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 54.20 டாலர்கள் ஆகும். எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவது உறுதியாகி இருக்கும் நிலையில், அவர் பதிவிட்ட பழைய டுவிட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
பழைய டுவிட்:
2017, டிசம்பர் 21 ஆம் தேதி எலான் மஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தில், "I Love Twitter" என தெரிவித்து இருந்தார். இவரின் பதிவுக்கு டேவ் ஸ்மித் என்பவர், நீங்கள் வேண்டுமானால் டுவிட்டரை வாங்கி விடுங்கள் என பதில் அளித்து உள்ளார். இதை பார்த்ததும், எலான் மஸ்க் டேவ் ஸ்மித் இடம் “How much is it?” (அதன் விலை என்ன) என்று பதில் அளித்து இருந்தார். எலான் மஸ்க் டிசம்பர் 21 ஆம் தேதி பதிவிட்ட இந்த பதிவு இன்று, டுவிட்டரை எலான் மஸ்க் வாங்க இருப்பது உறுதி செய்யப்பட்ட தினத்தில் வைரல் ஆகி வருகிறது.
தற்போது வரை இந்த டுவிட்டர் பதிவு 1 லட்சத்து 74 ஆயிரம் லைக்குகளையும், 35 ஆயிரம் ரி-டுவிட்களையும் பெற்று இருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன் சொன்னதை போன்றே எலான் மஸ்க் இன்று டுவிட்டர் நிறுவனத்தை வாங்க இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கருத்து:
இது தவிர சில வாரங்களுக்கு முன் எலான் மஸ்க் தனது டுவிட்டரில், "ஜனநாயகத்தில் சுதந்திர பேச்சுரிமை மிகவும் அத்தியாவசியமானது. டுவிட்டர் இதனை சரியாக பின்பற்றுவதாக நீங்கள் நினைக்கின்றீர்களா?" என கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு சுமார் 70.4 சதவீதம் பேர் இல்லை என்றே பதில் அளித்து இருந்தனர். இந்த பதிவிலும் ஒருவர், எலான் மஸ்கிடம் டுவிட்டரை வாங்க வலியுறுத்தி இருந்தார்.
இதன் அடிப்படையில் தான் எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தில் 9.2 சதவீத பங்குகளை வாங்கி இருந்தார். இதை அடுத்து டுவிட்டர் நிர்வாக குழுவில் இணையுமாறு எலான் மஸ்கிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதை அடுத்து டுவிட்டர் நிறுவனத்தை வாங்க விரும்புவதாக எலான் மஸ்க் தெரிவித்தார். இதை அடுத்து பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின் டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்கிற்கு விற்பனை செய்ய அதன் நிர்வாக குழு ஒப்புதல் அளித்தது.