அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் இருக்கிறது கிராண்ட்ஸ்வில்லே நகரம். இங்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இங்கிருக்கும் ஒரு வீட்டில் 4 பேர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டு கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு காவலர்கள் விரைந்தனர். அங்கு 4 பேர் குண்டடிபட்டு பிணமாக கிடந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

அவரை காவலர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கி சூடு குறித்து வழக்கு பதிவு செய்திருக்கும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரையும் துப்பாக்கியால் சுட்டு கொன்றவர் அவர்களின் நெருங்கிய உறவினர் என்று கூறப்படுகிறது. அவர் தற்போது கைதாகி இருக்கிறார்.

எனினும் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டவர்கள் குறித்த விபரத்தை காவல்துறையினர் தற்போது வரை வெளியிடவில்லை. சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருப்பவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதனால் பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவை இல்லை என்றும் நகர காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Also Read: இருமுடி கட்டி மலையேறிய ஓ.பி.எஸ்..! சபரிமலையில் பயபக்தியுடன் தரிசனம்..!