23 நாடுகளுக்கு பரவியுள்ள குரங்கு காய்ச்சல்..! உலக நாடுகளுக்கு WHO எச்சரிக்கை
குரங்கு காய்ச்சல் நோய் 23 நாடுகளில் பரவியது சோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இந்த நோய் மேலும் பல நாடுகளுக்கு பரவ வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
23 நாடுகளில் 257 பேருக்கு பாதிப்பு
கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக மக்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்து வந்தனர்.இன்னும் கொரோனா முழுமையாக ஒழியாத நிலையில் புதுப்புது வைரஸ் மக்களை அச்சுறுத்தி வருகிறது. ஒமிக்ரான், குரங்கு காய்ச்சல் என ஒன்றன் பின் ஒன்றாக அச்சுறுத்தி வருகிறது. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கடந்த, 1980களில் ஒழிக்கப்பட்ட சின்னம்மை நோய் போன்றது இந்த குரங்கு காய்ச்சல் என கூறப்படுகிறது. கடும் காய்ச்சல், உடலில் கொப்புளங்கள் ஏற்படுவது இதன் அறிகுறிகளாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஆப்ரிக்க நாடுகளில் தென்படும் இந்த வைரஸ் பாதிப்பு, தற்போது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் என, பல நாடுகளில் பரவி வருகிறது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு கூறுகையில், இந்த குரங்கு காய்ச்சல் இதுவரை 23 நாடுகளில் பரவியுள்ளது. மொத்தம் 257 பேருக்கு இந்த குரங்கு காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் 150 பேருக்கு சந்தேகம் அளிக்கும்படியான அறிகுறிகள் இருப்பதாக கூறியுள்ளது.
எச்சரிக்கை விடுக்கும் உலக சுகாதார அமைப்பு
மேலும் இந்த குரங்கு காய்ச்சல் பொது சுகாதாரத்திற்கு மிதமான ஆபத்தை அளிக்கிறது என WHO எச்சரித்துள்ளது. இந்த குரங்கு காய்ச்சல் இதுவரை கண்டறியப்படாத நாடுகளிலும் பரவி வருவதாக தெரிவித்துள்ளது. இந்த குரங்கு காய்ச்சல் இளம் குழந்தைகள், நோய் எதிர்ப்பு குறைபாடு உள்ளவர்கள் மற்றும் கடுமையான நோய்களின் ஆபத்தில் உள்ளவர்களுக்கு இந்த குரங்கு காய்ச்சல் பரவினால் பொது சுகாதாத்திற்கு ஆபத்த ஏற்பட்டு விடும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை 257 பேருக்கு குரங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டாலும் உயரிழப்பு இதுவரை எதுவும் ஏற்படவில்லையென தெரிவித்துள்ளது. மேலும் குரங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தொற்று இல்லாத நாடுகள் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என WHO கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் பல நாடுகளில் குரங்கு காய்ச்சல் தொற்று உறுதியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது. எனவே இந்த வைரஸை கட்டுப்படுத்த குரங்கு காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு துல்லியமான தகவலை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது. ,ஆபத்தில் உள்ள குழுக்களிடையே குரங்கு காய்ச்சல் பரவுவதை தடுத்து நிறுத்த வேண்டும், முன்கள சுகாதார ஊழியர்களைப் பாதுகாக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.