லடாக் பகுதியில் சீன ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்தவர் உள்பட 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்திருக்கிறார்கள். இந்திய வீரர்களின் பதிலடியில் சீனதரப்பில் 43 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவுடன் எல்லைகளை பகிரும் முக்கியமான நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன், இந்தியா எப்போதும் நட்பு பாராட்டவே விரும்புகிறது. ஆனால் இந்த நாடுகள் ஒருபோதும் இந்தியாவை நண்பனாக கருதியது இல்லை.எதிரியாகவே பார்த்து வருகிறது. கார்கில் போர் லடாக் அட்டாக் புல்வாமா தாக்குதல் என இந்தியாவை இந்த நாடுகள் சீண்டிக்கொண்டே வருகிறன்றது.வடமேற்கு எல்லையை பகிரும் பாகிஸ்தான் இந்தியாவுடன் போர் தொடுத்து வெற்றி பெற முடியாததால் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவித்து அன்றாடம் இந்தியாவுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறது. அது சர்வதேச அளவில் அம்பலப்பட்டு அடிக்கடி அசிங்கப்பட்டு போகிறது.

மறுபுறம் வடகிழக்கு எல்லையை பகிரும் சீனாவோ இந்திய பகுதிகளை ஆக்கிரமித்து தனது எல்லையை விரிவுபடுத்த கங்கணம் கட்டிக்கொண்டு காத்திருக்கிறது. அருணாசல பிரதேசத்தை தெற்கு திபெத் என சொந்தம் கொண்டாடும் அந்த நாடு, இந்திய எல்லைக்குள் நுழைவதற்கு தக்க தருணத்தை தேடிக்கொண்டு இருக்கிறது.இதனால் அருணாசல பிரதேசம், லடாக், சிக்கிம் என இருநாட்டு எல்லைப்பகுதிகளில் இந்திய சீன வீரர்கள் அடிக்கடி கைகலப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இரு நாடுகளுக்கு இடையேயான 3,488 கி.மீ. எல்லைப்பகுதி எப்போதும் பதற்றம் நிறைந்ததாகவே காணப்படுகிறது.


கடந்த 2017-ம் ஆண்டு கூட சிக்கிம் எல்லையில் உள்ள டோக்லாம் பகுதியில் இரு நாட்டு படைகள் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. அங்கு சீன ராணுவம் சட்ட விரோதமாக மேற்கொண்ட சாலைப்பணிகளை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தியதால் இரு நாட்டு படைகளும் இடையில் பிரச்சனை ஏற்பட்டது.இந்த சம்பவத்துக்குப்பின் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு சுமுக நிலைக்கு திரும்பிய நிலையில், சீன ராணுவம் மீண்டும் தனது வேலையை காட்டியுள்ளது. இந்த முறை அவர்களது கவனம் லடாக்கில் இருந்தது. லடாக்கின் கிழக்கு பகுதியில் உள்ள "பங்கோங் சோ" ஏரி பகுதியில் சீன வீரர்கள் சட்ட விரோதமாக ஊடுருவினர்.

கடந்த மாத தொடக்கத்தில் நடந்த இந்த ஊடுருவலை கண்டறிந்த இந்திய வீரர்கள் சீன ராணுவத்தினரை திரும்பி செல்லுமாறு வலியுறுத்தினர். இதில் இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. கடந்த மாதம் 5 மற்றும் 6-ந்தேதிகளில் நடந்த இந்த மோதலில் இரு தரப்பிலும் பல வீரர்கள் காயமடைந்தனர். மேலும் கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு, டெம்சோக், தவுலத் ஓல்டி போன்ற பகுதிகளிலும் இரு நாட்டு வீரர்களும் நேருக்குநேர் மோதிக்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் சீனா ஆயுதங்களுடன் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களை குவித்தது. இதனால் இந்தியாவும் கூடுதல் படைகளை லடாக்கில் களமிறக்கியது. மேலும் உத்தரகாண்ட், அருணாசல பிரதேசம், சிக்கிம் என இந்தியா சீனா எல்லையில் இரு நாடுகளும் படைகள் குவித்தன. இதனால் இரு நாட்டு எல்லையில் பெரும் பதற்றம் நிலவி வந்தது.

ஒருபுறம் படைகள் குவிக்கப்பட்டாலும், மறுபுறம் இந்த பதற்றத்தை தணிக்க இரு நாடுகளும் தீவிரம் காட்டின. அதன்படி ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலும், மேஜர்கள் மட்டத்திலும் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இதில் உடன்பாடு ஏற்படவில்லை.எனவே இரு தரப்பிலும் ராணுவ உயர் அதிகாரிகள் சந்தித்து பேசினர். இதில் இரு நாடுகளும் கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து படைகளை விலக்கிக்கொள்ள ஒப்புக்கொண்டன. இதை அறிவித்த ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே, கல்வான் பள்ளத்தாக்குக்கு வடக்கில் இருந்து இந்தியா படைகளை விலக்கி வருவதாக தெரிவித்தார்.

இந்த பணிகள் நடந்து வந்த நிலையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று முன்தினம் இரவு இரு நாட்டு வீரர்களுக்கு இடையே திடீரென பயங்கர மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். சீன வீரர்கள் இந்திய படையினர் மீது கற்களை வீசி தாக்கினர்.கற்களாலும், கம்பிகளாலும் தாக்கிக்கொண்டதில் பலருக்கு காயம் ஏற்பட்டது. நேற்று காலைவரை பல மணி நேரம் நீடித்த இந்த மோதலில் இந்தியா தரப்பில் ராணுவ அதிகாரி (கர்னல்) ஒருவரும், 2 வீரர்களும் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.

வீரமரணம் அடைந்த வீரர்களில் ஒருவர் ராமநாதபுரம் மாவட்டத்தின் கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த பழனி என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால் இந்த மோதலில் இந்திய வீரர்கள் மொத்தம் 20 பேர் பலியாகி விட்டதாக இரவில் தெரியவந்தது. கடல் மட்டத்தில் இருந்து பல ஆயிரம் மீட்டர் உயரத்தில் பூஜ்ஜிய டிகிரி வெப்ப நிலையில் நடந்த இந்த இருதரப்பு மோதலில் பலத்த காயமடைந்த மேலும் 17 வீரர்கள் பலியாகி விட்டனர்.

இந்த மோதலில் சீனா தரப்பிலும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டு உள்ளது. அங்கு 43 வீரர்கள் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் லடாக் எல்லையில் இரு நாடுகளுக்கு இடையே பலத்த மோதல் நடந்திருப்பதும், அங்கு நிலைமை மோசமாக இருப்பதும் தெரியவந்துள்ளது.