வெள்ளம் போல சாலைகளில் பாய்ந்து ஓடிய 22 லட்சம் லிட்டர் ரெட் ஒயின்! போர்ச்சுகலில் நடந்தது என்ன?
மதுபான நிறுவனம் மன்னிப்புக் கேட்டு, நகரத்தில் ஒயின் வெள்ளம் பாய்ந்த இடங்களை சுத்தம் செய்யும் பொறுப்பை ஏற்பதாகவும் உறுதி அளித்துள்ளது.
போர்ச்சுகலில் உள்ள சாவோ லூரென்சோ டோ பைரோ என்ற சிறிய நகரத்தின் தெருக்களில் ஞாயிற்றுக்கிழமை சிவப்பு நிறத்தில் ஒயின் நதி ஓடத் தொடங்கியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
நகரத்தில் உள்ள மலையிலிருந்து லட்சக்கணக்கான லிட்டர் ஒயின் கீழே பாய்ந்து தெருக்களில் வழிந்தோடியதை அப்பகுதி மக்கள் திகைப்புடன் பார்த்தனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நகரத்தின் சாலைகளில் ஒயின் ஆறாக ஓடிய காட்சியின் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவுகின்றன.
அந்த நகரில் உள்ள ஒயின் தயாரிப்பு ஆலையில் நடந்த விபத்து தான் காரணம் என்று கூறப்படுகிறது. 20 லட்சம் லிட்டருக்கும் அதிகமான சிவப்பு ஒயின் கொண்ட பீப்பாய்கள் ஏற்றிச் சென்ற வாகனம் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானதால், இந்த ஒயின் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஆப்பிள் விழாவில் புதிய ஐபோன் 15 இன்று வெளியீடு! தரமான மொபைல் தாறுமாறான விலையில்!
ஒலிம்பிக் நீச்சல் குளத்தை நிரப்பக்கூடிய அளவு ஒயின் வெள்ளமாக சாலைகளில் பெருக்கெடுத்து ஓடி அருகிலுள்ள ஆற்றில் கலந்துவிட்டது. இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பு அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஒயின் வெள்ளம் ஒரு வீட்டின் அடித்தளத்திலும் புகுந்ததாகக் கூறப்படுகிறது.
செர்டிமா நதி ஓயின் நதியாக மாறுவதற்கு முன், ஒயின் வெள்ளத்தைத் தடுக்க தீயணைப்புத் துறையினர் நடவடிக்கை எடுத்தனர். பெருக்கெடுத்து ஓடிய ரெட் ஒயின் வெள்ளம் வேறு திசையில் திருப்பிவிடப்பட்டு, அருகிலுள்ள வயல்வெளியில் பாயச் செய்யப்பட்டது என்று நியூயார்க் போஸ்ட் தெரிவிக்கிறது.
இந்த வினோதமான சம்பவத்திற்கு மதுபான நிறுவனம் மன்னிப்புக் கேட்டு, நகரத்தில் ஒயின் வெள்ளம் பாய்ந்த இடங்களை சுத்தம் செய்யும் பொறுப்பை ஏற்பதாகவும் உறுதி அளித்துள்ளது. "சுத்தம் செய்தல் மற்றும் சேதங்களை சரிசெய்வது தொடர்பான செலவுகளுக்கு நாங்கள் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறோம். உடனடியாகச் நடவடிக்கை எடுக்கிறோம்" என்று அந்நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.