123 நாடுகள் சீனாவுக்கு எதிராக கையெழுத்துப் போட்டது...!! குற்றவாளிக் கூண்டில் ஜி ஜின் பிங்..?
இது குறித்து தெரிவித்துள்ள சீனா இது கொரோனா வைரஸ் குறித்து விசாரிப்பதற்கான நேரமல்ல என தனது அதிருப்தியை வெளிபடுத்தியுள்ளது
கொரோனா வைரஸ் பரவியதற்கு சீனாதான் காரணமென பல்வேறு உலக நாடுகள் சீனா மீது குற்றம் சாட்டி வருகின்றன . இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் 73வது கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், கொரோனா விவகாரத்தில் சீனா மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என அந்நாட்டுக்கு எதிராக ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய யூனியன் சார்பில் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது. இத்தீர்மானத்தை இதுவரை 123 நாடுகள் ஆதரித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன . இது சீனாவை மிகவும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது . இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள சீனா இது கொரோனா வைரஸ் குறித்து விசாரிப்பதற்கான நேரமல்ல என தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 48 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் . உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்தை கடந்துள்ளது . இந்த வைரசால் அமெரிக்கா மற்றும் இத்தாலி , ஸ்பெயின் , பிரான்ஸ் , ஜெர்மனி , ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டன் , உள்ளிட்ட நாடுகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன . இந்த வைரசால் ஒட்டு மொத்த மேற்கத்திய நாடுகளும் நிலைகுலைந்து போயுள்ளன. இந்த வைரசுக்கு சீனா தான் காரணம் என அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது . அதேபோல் ஆஸ்திரேலியா , சீனா மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக வலியுறுத்தி வருகிறது . ஜெர்மனியும் தன் பங்குக்கு தங்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என சீனாவை வலியுறுத்தி வருகிறது. இதுமட்டுமல்லாது ஆப்பிரிக்கா மற்றும் தென்னமெரிக்க நாடுகள் சீனா இந்த பேரழிவுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும் என முழங்கி வருகின்றன. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் 73 ஆவது உலக சுகாதார கூட்டம் 18 மற்றும் 19 ஆகிய இரு தினங்கள் நடைபெற உள்ளன.
இந்த அமைப்பில் இதுவரை சுமார் 194 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கின்றனர் , இன்னும் பல நாடுகள் பார்வையாளர்களாக பங்குபெற உள்ளன . வீடியோகான்பரன்சிங் மூலம் இந்த கூட்டம் நடைபெற உள்ளது . இதில் பல்வேறு முக்கிய நாடுகளின் தலைவர்கள் உரையாற்ற உள்ளனர். இதில் மிக முக்கியமாக இரண்டு தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன . அதாவது தற்போது உலகையே ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸ் குறித்தும் அந்த வைரஸ் உருவானது குறித்தும், அது சீனாவில் இருந்து எப்படி படிப்படியாக மற்றநாடுகளுக்கு பரவியது என்பது குறித்தும், ஒருபக்கச் சார்பற்ற நடுநிலையான ஒரு சுதந்திரமான விசாரணை குழு அமைப்பது குறித்தும் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது . அதேபோல் நீண்டகாலமாக உலக சுகாதார நிறுவனத்தில் உறுப்பினராக வேண்டும் என போராடிவரும் தைவானை சீனா தடுத்து வரும் நிலையில் தைவான் விவகாரம் குறித்தும் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளதாக கூறப்படுகிறது .
மொத்தத்தில் இந்த இரண்டு தீர்மானங்களும் சீனாவை மையப்படுத்தியே இருப்பதால் முழுக்க முழுக்க சீனாவுக்கு எதிர் மனநிலையில் உள்ள நாடுகளும் ஓரணியில் திரளும் சூழல் உருவாகியுள்ளது . சமீபத்தில் சீனாவுக்கு எதிராக பல நாடுகள் கருத்து கூறி வந்த நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஒற்றைப் போர்வீரர் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வர்ணித்திருந்தார் இந்நிலையில் உலகின் அத்தனை நாடுகளும் ஓரணியில் நிற்க சீனா தனி ஆளாக குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கிறது என்றே சொல்லலாம் . அதாவது இன்று நடைபெற உள்ள கூட்டத்தில் 194 நாடுகள் உறுப்பினராக உள்ள நிலையில் , இதுவரையில் சுமார் 123 நாடுகள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த அவையில் தீர்மானம் நிறைவேற மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை என்ற நிலையில் இந்த தீர்மானம் முழு வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது . இப்படி தீர்மானம் வெற்றி பெறும் பட்சத்தில் ஒரு சர்வதேச வல்லுநர் குழு சீனா சென்று அங்கு விசாரணை நடத்துவது உறுதியாகும். இந்தியாவும் சீனாவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியமும் ஆஸ்திரேலியாவும் கொண்டுவந்துள்ள தீர்மானத்தை ஆதரித்துள்ளது .
இவ்வரைவு தீர்மானத்திற்கு ஏற்கனவே அல்பேனியா, பங்களாதேஷ், பெலாரஸ், பூட்டான், போட்ஸ்வானா, பிரேசில், கனடா, சிலி, கொலம்பியா, ஐஸ்லாந்து, இந்தோனேசியா, ஜப்பான், மெக்ஸிகோ, நியூசிலாந்து, வடக்கு மாசிடோனியா, நார்வே, பெரு, போன்ற நாடுகளின் ஆதரவு கிடைத்துள்ளது. கொரியா, ரஷ்யா, சான் மரினோ, சியரா லியோன், தென்னாப்பிரிக்கா, துருக்கி, உக்ரைன், பிரிட்டன், வடக்கு அயர்லாந்து மற்றும் சாம்பியா. போன்ற நாடுகள் ஆதரித்துள்ளன இந்நிலையில் சீனாவின் நீண்டநாள் நட்பு நாடான ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சீனாவுக்கு எதிரான இத்தீர்மானத்தை ஆதரித்துள்ளார். தற்போது உலக நாடுகள் அனைத்தும் ஓரணியில் திரண்டுள்ள இந்தச் சூழலில் சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியான் இன்னும் பல நாடுகளில் கொரோனா தாக்கம் முடிவடையவில்லை ,அதற்குள் கொரோனா பரவியது குறித்து ஆராய்ச்சி செய்யவேண்டிய நேரம் இதுவல்ல இந்த விசாரணை முன்கூட்டியே நடத்துவது போல் சீனா உணருகிறது என தெரிவித்துள்ளார் . சீனாவின் இந்த கருத்துக்கு பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.