சீனாவின் ஹுபே மாகாணம், வுஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ், அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெய்ன் ஆகிய நாடுகளில் பேரழிவை ஏற்படுத்திவருகிறது. அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டிவிட்டது. 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

ஸ்பெய்னிலும் கொரோனாவின் தாக்கம் அதிகமாகவுள்ளது. ஆனால் இத்தாலி தான் கொரோனாவால் அதிகமான உயிரிழப்புகளை சந்தித்த நாடு. இத்தாலியின் மொத்த மக்கள் தொகையில் 75% பேர் முதியவர்கள் என்பதால், அங்கு கொரோனா வேகமாக பரவியது. 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், 101 வயது முதியவர் கொரோனாவிலிருந்து மீண்ட சம்பவம் உலகிற்கே நம்பிக்கையூட்டும் சம்பவமாக அமைந்துள்ளது. 

10 மாத குழந்தை முதல் 100 வயது முதியவர் வரை எந்த தரப்பையும் விட்டுவைக்கவில்லை கொரோனா. இந்நிலையில், இத்தாலியின் கடலோர பகுதியான ரிமினியை சேர்ந்த 101 வயது முதியவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, ஓஸ்பெடேல் நகரிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டது. தொடர் சிகிச்சையில் அந்த முதியவர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார்.

முதியோரும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோரும் கொரோனாவால் எளிதாக பாதிக்கப்படுவார்கள் என்று சொல்லப்பட்டுவரும் நிலையில், 101 வயது முதியவர் கொரோனாவிலிருந்து மீண்டு முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியிருப்பது உலகத்திற்கே நம்பிக்கையூட்டும் சம்பவமாக அமைந்துள்ளது.