நெடுந்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை காங்கேசம்துறை கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 2 விசைப்படகுகளில் 10 மீனவர்கள் நேற்று இரவு மீன் பிடிக்க சென்றனர். நெடுந்தீவு அருகே நடுக்கடலில் வலையை விரித்து அவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி அவர்களை சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

பின்னர், 10 பேரையும், காங்கேசம்துறை கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

சிறைபிடிக்கப்பட்டவர்களின் பெயர் விவரங்கள், கடலுக்கு மற்ற படகுகளில் சென்றவர்கள் வந்தால் மட்டுமே தெரியும் என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.