நாமக்கல்

கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதான யுவராஜ் மற்றும் அவரது கார் ஓட்டுநர் அருணுக்கு ஆகஸ்டு 31–ஆம் தேதி வரை நீதிமன்க் காவலை நீட்டிப்புச் செய்து நாமக்கல் நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்தது.

சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியியலாளர் கோகுல்ராஜ் (23) கொலை வழக்குத் தொடர்பாக நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. காவலாளர்கள் தீரன்சின்னமலை கௌண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேரை கைது செய்தனர்.

இதனையடுத்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட யுவராஜூக்கு கடந்த ஆண்டு மே மாதம் சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியதால் சிறையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

இதனிடையே யுவராஜூக்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

இதனையடுத்து கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் யுவராஜ் சென்னையில் மீண்டும் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள யுவராஜின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்ததை அடுத்து நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி இளவழகன் காணொலியில் யுவராஜின் நீதிமன்ற காவலை வருகிற ஆகஸ்டு மாதம் 31–ஆம் தேதி வரை நீட்டிப்புச் செய்து உத்தரவிட்டார்.

இதேபோல் இந்த வழக்கில் கைதுச் செய்யப்பட்டு, சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள யுவராஜின் கார் ஓட்டுநர் அருணின் நீதிமன்றக் காவலும் ஆகஸ்டு மாதம் 31–ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.