youth got attacked by people who theft from lady
சேலம்
சேலத்தில் கோவிலுக்கு சென்றுக் கொண்டிருந்த பெண்ணை பின்தொடர்ந்து வந்து நகையை பறித்த இளைஞரை பிடித்து அடித்து உதைத்து மக்கள், காவலாளர்களிடம் ஒப்படைத்தனர்.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதனையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து அடியார்கள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், நேற்று மதியம் சேலம் சித்தர் கோவில் பகுதியில் இருந்து காமலா புரம் கோவிலுக்கு செல்ல பெண் ஒருவர் பேருந்தில் வந்தார். அவர் பேருந்தில் ஆர்.சி.செட்டிபட்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி காமலாபுரம் கோவிலுக்கு நடந்து சென்றார்.
அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த இளைஞர் ஒருவர் திடீரென அவரது கழுத்தில் கிடந்த 10 சவரன் நகையை பறித்து கொண்டு ஓட முயன்றார். உடனே சுதாரித்த அந்த பெண், திருடன், திருடன் என்று அலறினார்.
அவரது அலறல் சத்தத்தை கேட்டு கூடிய அக்கம்பக்கத்தினர் அந்த இளைஞரை சுற்றி வளைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர், அந்த இளைஞரை ஓமலூர் காவலாளர்களிடம் ஒப்படைத்தனர்.
பிடிபட்ட நபரை காவலாளர்கள் காவல் நிலையம் கொண்டு சென்றனர். அங்கு அவரிடம் விசாரித்த போது அவர் பெயர் சக்திவேல் (33) என்றும், சென்னையில் இருந்து வந்ததாகவும், அம்மா சாப்பாடு போடவில்லை என்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் கூறி வருகிறார்.
அவர் உண்மையில் மனநலம் பாதிக்கப்பட்டவரா? அல்லது நகை பறித்தபோது காவலர்களிடம் சிக்கி கொண்டதால் மனநலம் பாதிக்கப்பட்டவர்போல் நடிக்கிறாரா? என்று காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
