youth claim cellphone tower and protest anitha death case
மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காததால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதிகேட்டு சென்னை பட்டினப்பாக்கம் அருகே செல்போன் டவரில் ஏறி இளைஞர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நீட் தேர்வால் மருத்துவ படிப்பில் சேர இடம் கிடைக்காததால் அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணத்துக்கு நீதி கேட்டு தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.
இந்நிலையில் சென்னை பட்டினப்பாக்த்தைச் சேர்ந்த ராக்கி என்ற இளைஞர், அங்குள்ள குற்ற ஆவண காப்பக அலுவலகம் அருகே உள்ள செல்போன் டவரில் திடீரென ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.
மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும், அனிதா குறித்து ஆவணப்படம் எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் அவர் செல்போன் டவரில், 70 அடி உயரத்துக்கு ஏறி அங்கிருந்து குதிக்கப் போவதாக மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர், சம்பவ இடத்துக்குச் சென்று அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது அவர் பிளேடால் தனது கழுத்து மற்றும் கைகளில் அறுத்துக் கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மீட்புக்குழுவினர் அவரிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
அவரது கோரிக்கைகள் குறித்து பரிசீலிப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து ராக்கி என்ற அந்த இளைஞர் டவரில் இருந்து இறங்கினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
