திருநெல்வேலி

சல்லிக்கட்டுக்காக போராடியதுபோல தமிழக மாணவர்களும், இளைஞர்களும் ஒருங்கிணைந்து நீட் தேர்வை எதிர்த்தும் போராட வேண்டும் என்று தமுமுக மூத்த தலைவர் ஐதர் அலி தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்டம், தென்காசியில் தமுமுக மூத்த தலைவர் ஐதர் அலி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அதில், “நீட் தேர்வை பொருத்தவரை மத்திய அரசு, மாநில அரசுகளின் உரிமையை தட்டிப் பறிப்பதை கடுமையாக தமுமுக கண்டிக்கிறது.

பயின்ற பாடத்திலிருந்து கேள்விகளைக் கேட்காமல் சிபிஎஸ்இ பாடத் திட்டத்திலிருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன.

மருத்துவத் துறையில் தமிழகம் தான் முதலிடத்தில் இருக்கிறது.

தற்கொலை என்பது விடியல் அல்ல. ஆனால் அனிதா விவகாரத்தில் அவருக்கு ஏற்பட்ட மன அழுத்தம்தான் அவரை இந்த நிலைக்குத் தூண்டியது. இதற்கு முழுமையான காரணம் மத்திய, மாநில அரசுகள்தான்.

நீட் தேர்வின் மூலம் வசதி படைத்தவர்கள் மட்டும்தான் தேர்வு செய்யப்படும் சூழ்நிலை நிலவுகிறது.

எய்ம்ஸ் போன்ற மருத்துவக் கல்லூரிகளில் பயின்றுவிட்டு அவர்களில் 70 சதவீதம் பேர் வெளி நாடுகளில்தான் பணி புரிகின்றனர்.

தமிழகத்துக்கு நீட் தேவையில்லை என்பதை வலியுறுத்தி மாணவர், மாணவிகள் தாங்களாகவே போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். மாணவர், மாணவிகளின் போராட்டம் மேலும் வலுப்பட வேண்டும் என்பதே தமுமுகவின் நிலைப்பாடு.

சல்லிக்கட்டு போராட்டத்திற்கு தமிழகத்தில் இளைஞர்கள், மாணவர்கள் ஒன்றிணைந்தது போல் நீட் தேர்வை ரத்து செய்ய மீண்டும் ஒருங்கிணைந்து போராட வேண்டும்.

தமிழகத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் சாராயக் கடைகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. மீண்டும் கடைகளை திறக்கவிடாமல் போராடும் பெண்கள் அத்துமீறுவது தவறில்லை” என்று அவர் தெரிவித்தார்