Asianet News TamilAsianet News Tamil

சொட்டு மருந்தை பயமின்றி போட்டுக் கொள்ளலாம்; எந்த பக்க விளைவும் இல்லை – ஆட்சியர் அட்வைஸ்…

You can put drops without fear There is no side effect collectors Advice
you can-put-drops-without-fear-there-is-no-side-effect
Author
First Published Apr 3, 2017, 8:28 AM IST


உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற தரமான சொட்டு மருந்தே அரசால் வழங்கப்படுவதால் குழந்தைகளுக்கு எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது. எனவே, அனைவரும் பயமின்றி போடலாம் என்று ஈரோடு ஆட்சியர் எஸ்.பிரபாகர் தெரிவித்தார்.

ஈரோடு அரசு மருத்துவமனையில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையின் சார்பில் தீவிர போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நேற்று நடைபெற்றது.

இந்த முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தலைமை வகித்தார். மேலும், ஐந்து வயதிற்கு உள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி முகாமைத் தொடங்கி வைத்தார். ஈரோடு எஸ்.செல்வகுமார் சின்னையன் எம்.பி. முன்னிலை வகித்தார்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் பேசியது:

“ஈரோடு மாவட்டத்தில் கிராமப் புறங்களில் 1,087 மையங்களும், நகர்ப் புறங்களில் 202 மையங்களும் என மொத்தம் 1,289 போலியோ சொட்டு மருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டன.

இந்த மையங்கள் மூலம் ஐந்து வயதிற்கு உள்பட்ட 2 இலட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு உள்ளது. இதில் 10 ஆயிரத்து 89 குழந்தைகள் மலைப்பகுதியில் வசிக்கின்றனர். இவர்களுக்கு 104 மையங்களிலும், 6 நடமாடும் மையங்கள் மூலமாகவும் போலியோ சொட்டு மருந்துகள் வழங்கப்பட்டது.

வெளி மாநிலங்களில் இருந்து பணி நிமித்தமாக இடம் பெயர்ந்து வசிப்பவர்களின் 751 குழந்தைகளுக்கு 30 மையங்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

மேலும், பேருந்து நிலையம், இரயில் நிலையம், கோவில்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க 62 மையங்கள் மற்றும் 23 நடமாடும் மையங்கள் சிறப்பு முகாம்களாக அமைக்கப்பட்டன.

போலியோ சொட்டு மருந்து வழங்கும் மையங்களில் பொது சுகாதாரத்துறை, அங்கன்வாடி பணியாளர்களுடன் பிற துறை பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ரோட்டரி சங்கங்கள் என 5,234 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இந்த பணிகளுக்கு 97 அரசு துறை வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அரசால் வழங்கப்படும் போலியோ சொட்டு மருந்து மிகவும் தரமானது, பாதுகாப்பானது, உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்றது.

போலியோ சொட்டு மருந்து வழங்குவதன் மூலம் குழந்தைகளுக்கு எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படாது.

போலியோ சொட்டு மருந்து முகாம் இரண்டாம் தவணையானது வருகிற 30–ஆம் தேதி நடைபெறவுள்ளது” என்று அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் ஈரோடு ஆர்.டி.ஓ. நர்மதாதேவி, சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் த.கனகாசலகுமார், துணை இயக்குனர் பெ.பாலுசாமி, உறைவிட மருத்துவ அதிகாரி அரங்கநாயகி, மருத்துவமனை கண்காணிப்பாளர் லட்சுமி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், செவிலியர்கள் பலர் பங்கேற்றனர்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios