You can contact 1070 for heavy rainfall - Minister informed

கனமழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ள நிலையில், அதன் பாதிப்புகள் குறித்து 1070 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 27 ஆம் தேதி தொடங்கி தற்போது தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்து வருகிறது. சென்னையில் சில நாள்கள் தொடர்ச்சியாக கனமழை பெய்தது. இதனால், சென்னையின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கின. குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் மக்கள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகினர். 

தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை, அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை காரணமாக, பல ஏக்கரிலான விவசாய பயிர்கள் நீரில் மூழ்கின.

கடந்த சில நாட்கள் மழை குறைந்திருந்த நிலையில், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை பெய்யத் துவங்கியுள்ளது. வரும் 5 நாட்களில் கனமழை இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

கனமழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ள நிலையில், அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், கனமழை மற்றும் பாதிப்புகள் குறித்த தகவல்களைப் பொதுமக்கள் உடனடியாக தெரிவிக்க, 1070 என்ற கட்டுப்பாட்டு அறை எண்ணுக்குத் தகவல் அளிக்கலாம் என்று கூறியுள்ளார். மேலும், பாதிப்புகள் ஏற்படுவதற்கான இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.