தமிழகத்தில் இதுவரை XE வகை கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இதுவரை XE வகை கொரோனா வைரஸ் கண்டறியப்படவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஜனவரி 19 ஆம் தேதி பிரிட்டனில் முதன்முதலாக XE வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இது ஒமைக்ரான் வைரஸில் இருந்து உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் திரிபு என தெரிவிக்கப்பட்டது. இந்த புதிய வகை வைரஸ் ஒமைக்ரானை விட அதிகமாகப் பரவக் கூடியதாக இருக்கலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. XE என்பது ஒமைக்ரானிலிருந்து உருமாறிய வைரஸ்களான BA.1 மற்றும் BA.2 ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடமிருந்து உருமாறியுள்ளது. இந்த உருமாற்றம் அடைந்த XE வகை கொரோனா வைரஸ் இந்தியாவில் மும்பையை சேர்ந்த ஒருவருக்கு இருப்பது நேற்று கண்டறியப்பட்டது.

இந்த நிலையில் தமிழகத்தில் இதுவரை XE வகை வைரஸ் கண்டறியப்படவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு 3.2 லட்சத்தில் இருந்து 3.8 லட்சம் வரை கொரோனா பரிசோதனை செய்யக்கூடிய திறன் உள்ளது. கொரோனா இன்னும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை. எனவே, பொதுமக்கள் இதை புரிந்து கொண்டு கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். முறையாக தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம்.

ஏதாவது அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டவர்கள் தான் பொது இடங்களில் வர வேண்டும் என டிபிஎச் ஆணையிட்டு இருந்தது. அந்த ஆணையை கடைபிடித்ததன் வாயிலாக தற்போது 92 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இதனால், தான் கொரோனா பரவல் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாக வந்து தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். கொரோனா குறைந்து விட்டதாக நினைத்து மாஸ்க் அணிய தேவை இல்லை, கைகளை கழுவ தேவை இல்லை என்ற எண்ணம் மக்களிடம் வந்துவிட்டது. இது தவறான கருத்து. தமிழ்நாட்டை பொறுத்த வரை XE வகை கொரோனா வைரஸ் இதுவரை கண்டறியப்படவில்லை. உருமாறுவது என்பது RNA வைரசின் பழக்கம். நாம் பதட்டப்படாமல் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.