worker held in Darna struggle with family for dint get electricity supply

வீட்டிற்கு மின் இணைப்பு தராமல் ஒரு மாதமாக அலைக்கழிக்கப்பட்ட தொழிலாலி உதவி மின் பொறியாளர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

கரூர் மாவட்டம், குளித்தலை ஊராட்சி ஒன்றியம் இரண்யமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட செம்மேட்டுபட்டியைச் சேர்ந்தவர் நல்லுச்சாமி மகன் ராமச்சந்திரன் (31).

தேமுதிக உறுப்பினரும், கூலித் தொழிலாளியுமான இவர் தனது மனைவி ஜெபக்குமாரி, மகன் கஜேந்தர், உறவினர் போலாட்சி ஆகியோருடன் பனிக்கம்பட்டியில் உள்ள உதவி மின்பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று தர்ணா போராட்டம் நடத்தினார்.

போராட்டம் குறித்து ராமச்சந்திரன் கூறியது: “செம்மேட்டுப்பட்டில் உள்ள எனது வீட்டிற்கு மின் இணைப்பு பெறுவது தொடர்பாக கடந்த மே மாதம் பனிக்கம்பட்டி உதவி மின்பொறியாளரிடம் மனு அளித்து அதற்கான தொகையை செலுத்தினேன்.

இதனையடுத்து எனது வீட்டின் அருகே மூன்று புதிய மின்கம்பங்கள் அமைக்கவேண்டும் என இங்குப் பணிபுரியும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இந்த அலுவலகத்தில் இருந்து எனது சொந்த செலவில் வாகனத்தில் மின்கம்பங்களை எனது வீட்டிற்கு ஏற்றிச் சென்றேன். மின்கம்பங்கள் நடுவதற்காக குழி பறிப்பதற்கான செலவையும் செய்தேன்.

இதையடுத்து மறுநாளே புதிய மின்கம்பங்களில் கம்பிகளை இணைத்து வீட்டிற்கு மின் இணைப்பு வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துச் சென்றனர். ஆனால், மின்இணைப்பு வழங்கவில்லை. இதனால் கூலித் தொழிலாளியான நான் வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்தேன்.

பலமுறை அலைக்கழிக்கப்பட நான் உதவி மின்பொறியாளரிடம் கேட்டபோது, அவர் சில நாள்களில் மின் இணைப்பு வழங்கப்படும்” என தெரிவித்தார்.

இதுகுறித்து குளித்தலை மின்சாரவாரிய உதவி செயற்பொறியாளரிடம் கூறியபோது, அவர் மின்இணைப்பு வழங்குவது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக கூறினார்.

ஆனால், இதுவரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் இன்று (நேற்று) காலை உதவி மின்பொறியாளர் பிச்சைராஜிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, எனது வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க சில நாள்கள் ஆகும் எனவும், உடனடியாக மின்இணைப்பு வழங்க வேண்டுமென்றால் உதவி செயற்பொறியாளரிடம் கேட்டுக்கொள்ளவும் என தெரிவித்தார்.

இதையடுத்து எனது வீட்டிற்கு உடனடியாக மின்இணைப்பு வழங்கக்கோரி குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டேன்” என்று அவர் தெரிவித்தார்.

இதன்பின்னர் அலுவலகத்திற்கு வந்த பனிக்கம்பட்டி உதவி மின்பொறியாளர் பிச்சைராஜ், வணிக ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் வருகிற 28–ஆம் தேதி ராமச்சந்திரன் வீட்டிற்கு மின்இணைப்பு வழங்கப்படும் என உறுதியளித்தனர்.

இதனை ஏற்றுக் கொண்ட ராமச்சந்திரன் தர்ணா போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றார்.