Women struggle for students and students to close the alcohol shop immediately

தருமபுரி

தருமபுரியில் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் சாராயக் கடையை மூடவேண்டி மாணவ, மாணவிகள், பெண்கள் என அனைவரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தருமபுரி - பாலக்கோடு சாலையில் கல்வி நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகள் உள்ள சௌளூர் மேம்பாலம் அருகே அரசு சாராயக் கடை இயங்கி வருகிறது.

இந்த வழியாக மாணவ, மாணவிகள், பெண்கள் அதிக அளவில் சென்று வருவதால் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அந்த சாராயக் கடையை மூட வேண்டும் என்று அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் நேற்று மதியம் அந்த சாராயக் கடை முன்பு திரண்டனர். மேலும், பெண்கள், தொழிலாளர்களும் அங்கு வந்தனர்.

“மக்களுக்கு இடையூறை ஏற்படுத்தும் இந்த சாராயக் கடையை உடனடியாக மூட வேண்டும்” என்று அந்த பகுதியில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவ, மாணவிகள் சாராயக் கடையை மூட வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினார்கள்.

இதுபற்றி தகவலறிந்த தர்மபுரி காவல் துணை கண்காணிப்பாளர் காந்தி, ஆய்வாளர் ரத்தினகுமார், தாசில்தார் ஜெயலட்சுமி, வருவாய் ஆய்வாளர் பிரகாஷ், கிராம நிர்வாக அலுவலர் ராஜ்குமார் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அங்கு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். “இதுதொடர்பாக உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுச் சென்று அந்த சாராயக் கடையை ஒரு மாதத்திற்குள் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அப்போது அதிகாரிகள் உறுதியளித்தனர்.

இதனையடுத்து தர்ணாப் போராட்டத்தை கைவிட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.