Asianet News TamilAsianet News Tamil

வங்கி வேலைக்கு ஆசைப்பட்டு ரூ.2 இலட்சத்தை பறிகொடுத்த பெண்; மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை கோரி புகார்...

woman lost Rs 2 lakhs for bank job Complaint to take actions against fraudsters
woman lost Rs 2 lakhs for bank job Complaint to take actions against fraudsters
Author
First Published Jun 19, 2018, 6:27 AM IST


வேலூர்
 
வங்கி வேலை பெறுவதற்காக ரூ.2 இலட்சத்து 28 ஆயிரம் பணத்தை பறிக்கொடுத்ஹ்ட பெண் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வேலூர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு கொடுத்தார்.

வேலூர் மாவட்டம், ஆற்காடு நகர பேஸ்-2 பகுதியைச் சேர்ந்தவர் அனுசந்தா (22). இவர், நேற்று வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அதில், "நான் கல்லூரி முடித்துவிட்டு பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தேன். அப்போது திருச்சியைச் சேர்ந்த எனது தோழி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வேலை உள்ளது என்றும், கோவையைச் சேர்ந்தவரிடம் ரூ.2 இலட்சத்து 30 ஆயிரம் கொடுத்தால் அந்த வேலை கிடைத்துவிடும் என்றும் கூறி ஆசைவார்த்தை காட்டினார்.

இதனையடுத்து நானும், அந்த நபரை செல்போனில் தொடர்புகொண்டு பேசினேன். அப்போது அவர் பணம் கொடுத்தால் சென்னையில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் 48 நாட்கள் பயிற்சியளித்து, பின்னர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வேலை தரப்படும் என்று கூறினார். 

அதனை நம்பி நானும், கடந்த மார்ச் மாதம் முதற்கட்டமாக ரூ.48 ஆயிரம் வங்கி மூலமாக செலுத்தினேன். பின்னர் சில நாட்களில் பயிற்சியில் சேருவதற்கான ஆணை, அடையாள அட்டை ஆகியவற்றை தபாலில் அனுப்பி வைத்தனர்.

பின்னர், சில நாட்களில் மீதி தொகையான ரூ.1 இலட்சத்து 80 ஆயிரத்தை வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைத்தேன். அதனைத் தொடர்ந்து சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் பயிற்சி மையத்துக்கு பயிற்சிக்கு சென்றேன். அங்கு வங்கி வேலை தொடர்பாக எதுவும் பயிற்சி அளிக்கப்படவில்லை என்று கூறி என்னை திருப்பி அனுப்பி வைத்துவிட்டனர்.

இதனால் மனமுடைந்துபோன நான், என்னுடைய ரூ.2 இலட்சத்து 28 ஆயிரத்தை திருப்பி தரும்படி கோவையைச் சேர்ந்த அந்த நபரிடம் கேட்டேன். அதற்கு அவர் பணத்தை வங்கியில் பணிபுரியும் உயரதிகாரி ஒருவரிடம் கொடுத்துவிட்டதாகவும், அவரிடம் இருந்து சில நாட்களில் வாங்கி தருவதாகவும் கூறினார். ஆனால், இதுநாள்வரை அந்தப் பணத்தை திருப்பி தராமல் அவர் ஏமாற்றி வருகிறார்.

எனவே, வங்கியில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, என்னுடைய ரூ.2 இலட்சத்து 28 ஆயிரத்தை பெற்றுத் தர வேண்டும்" என்று அதில் கூறியிருந்தார்.

இந்த மனுவைப் பெற்றுக்கொண்ட காவல் கண்காணிப்பாளர் இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios